கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 22 சென்ட் மாநகராட்சி இடத்தில் 32 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இவர்களை தற்போது கோழிக்கோடு மாநகராட்சி வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இவர்களின் முன்னோர்கள் 1950ம் ஆண்டு தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் முறையாக பிரிக்கப்படாத காலத்தில், இப்பகுதியில் குடியேறினர். அப்போது, மனிதக் கழிவுகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், 2013ம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் வேலைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பலர் வேலையிழந்தனர். தற்போது கோழிக்கோடு மாநகராட்சிக்கு சொந்தமான 22 சென்ட் இடத்தில் குடியிருந்து வரும் தமிழர்களை வெளியேறுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் இப்பகுதியில் குடியிருந்து வரும் நிலையில், தங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் தமிழர்கள். தங்களுக்கு வீடு, வாசல் என எதுவும் இல்லை என்றும், கேரள அரசின் உத்தரவால் செய்வதறியாமல் தவித்து வருவதாகவும், குறிப்பிடுகின்றனர்.
4 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்களை திடீரென வெளியேற்றக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகளை வைத்தக் கொண்டு செல்வதற்கு தங்களுக்கு வேறு இடம் இல்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
தங்களிடம் கேரள அரசு சார்பில் வழங்கப்பட்ட குடும்ப அட்டை இருப்பதாகவும், அரசு சார்பில் தங்களுக்கு வேறு குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.