Home /News /national /

கேரளா தங்கம் கடத்தல் விவகாரம்: தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமின் கேட்டு மனு..

கேரளா தங்கம் கடத்தல் விவகாரம்: தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமின் கேட்டு மனு..

ஸ்வப்னா சுரேஷ்

ஸ்வப்னா சுரேஷ்

15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தலில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமின் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தலில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமின் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மத்திய அரசின் உதவியை நாடி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கேரள அரசை அதிர வைத்துள்ள தங்கக் கடத்தலில் முதலமைச்சர் அலுவலகம் மீது குற்றம்சாட்டப்படும் நிலையில், இதன் முக்கிய புள்ளியாக தேடப்பட்டு வருபவர் ஸ்வப்னா சுரேஷ். கடந்த 4 நாட்களாக தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா, முன்ஜாமின் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் வழியாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அதில், இந்த குற்றத்தில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என கூறியுள்ள அவர், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் வழிகாட்டுதலின் பேரில் சுங்க உதவி ஆணையருக்கு மட்டுமே தொலைபேசியில் பேசியதாக கூறியுள்ளார்.

    மேலும், துணை தூதரகத்தில் தற்போது பொறுப்பாளராக உள்ள ராசித் காமிஸ் தான் தாமதமாக வரும் பார்சல் குறித்து பார்க்க சொன்னதாகவும் மனுவில் ஸ்வப்னா குறிப்பிட்டுள்ளார். இவரது முன்ஜாமின் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது. ஸ்வப்னா மீது சுங்கத்துறைச் சட்டம், 1962 ன் கீழ் 104 (6), 135 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தங்க கடத்தல் விவகாரத்தை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் விசாரிக்க வேண்டும் என பிரதமர் மோடியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

    ஸ்பேஸ் பார்க் நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஸ்வப்னாவைத் தெரியாது என முதலமைச்சர் பினராயி விஜயன் எப்படிக் கூற முடியும்? என அடுக்கடுக்கான ஆதாரத்தை வெளியிட்டு காங்கிரஸ் எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பி வருகிறார். பினராயி விஜயன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ரமேஷ் சென்னிதலா கூறியிருக்கிறார்.

    இந்நிலையில், இந்த வழக்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Kerala, Swapna Suresh

    அடுத்த செய்தி