கேரளாவில் பள்ளி மாணவி தற்கொலை: ஆன்லைன் வகுப்பை நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்

கேரளாவில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தேவிகா (14) இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கேரளாவில் பள்ளி மாணவி தற்கொலை: ஆன்லைன் வகுப்பை நிறுத்தக் கோரி மாணவர்கள் போராட்டம்
தேவிகாவின் வீடு
  • Share this:
கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணனின் மகள் தேவிகா. பட்டியலினச் சிறுமியான இவர் 10ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கேரளா முழுவதும் இணையவழியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவிகாவின் வீட்டில் தொலைக்காட்சி, ஸ்மார்ட் ஃபோன் வசதி இல்லாததால் அவர் வகுப்பில் கலந்துகொள்ள இயலாமல் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், திடீரென நேற்று மாலை 3.30 மணி அளவில் காணாமல் போயுள்ளார். அக்கம் பக்கத்தில் தேடியபோது அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலிருந்த ஆளில்லா வீடொன்றில், உடல் எரிந்த நிலையில் தேவிகாவின் சடலம் கிடைத்துள்ளது. மண்ணெண்ணெய் பாட்டில் ஒன்றும் அவர் அருகில் கிடந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. தேவிகாவின் அறையில் தற்கொலைக் குறிப்பு ஒன்று கிடைத்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். அதில் இதயத்தைக் கலங்கடிக்கச் செய்யும் வகையில், “நான் போகிறேன்” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார் அவர்.


காவல்துறையிடம் தேவிகாவின் தந்தை பாலகிருஷ்ணன் கூறும்போது, இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் விரக்தியில் தன் மகள் இருந்ததாகவும் தொலைக்காட்சியை சரிசெய்துத் தருமாறு கேட்டதாகவும் கூறியுள்ளார். தன் உடல்நிலை சரியில்லாததாலும் ஊரடங்கு காரணமாகவும் தான் வேலைக்குச் செல்ல இயலவில்லை என்றும் டி.வியை பழுது பார்க்கக்கூட தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரள கல்வி அமைச்சர் பேராசிரியர் சி. ரவீந்திரன் கருத்து தெரிவிக்கையில், மாவட்டக் கல்வி அதிகாரியின் மூலம் தேவிகா உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார். அத்தோடு, பரிட்சார்த்த முயற்சியாகவே இணையவழி வகுப்பை நடத்தியதாகவும் மாணவி தற்கொலை செய்துகொண்டது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.

ஏழை மாணவர்கள் இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாது என்பதால் அதை உடனே நிறுத்த வேண்டும் எனக் கூறி கேரளாவில் உள்ள மாணவர் அமைப்புகள் பல ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.


Also see:
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading