கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நிலாம்பூர் அருகே உள்ள கவலப்பாரா என்ற சிறிய கிராமமே நிலச்சரிவில் புதைந்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான கேரளாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கர்நாடகாவிலும் கடலோரப்பகுதிகளில் கனமழை கொட்டிவருகின்றது. கேரளாவில் மட்டும் பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை சுமார் 30 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.
நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் விமானப்படையினரின் உதவியைக் கோரியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன். மற்ற மாவட்டங்களைவிட வயநாடுதான் அதிக சேதத்தைச் சந்தித்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூதானம், கவலப்பாரா ஆகிய சிறிய கிராமங்கள் முற்றிலும் நிலச்சரிவில் புதைந்துள்ளது.
கவலப்பாரா கிராமத்தில் உள்ள 36 வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. இதுவரை 2 குழந்தைகள் உள்பட மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 41 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜே.சி.பி எந்திரங்கள் கொண்டு மண் சரிவை அகற்றும் பணி நடந்துவருகிறது. எனினும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.