கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் நடைபெறும் திருவிழாவின்போது நாள் முழுவதும் பெண்ணின் உடையை ஆண்கள் அணிந்து கொள்கின்றனர். இந்த சடங்குகள் மற்ற மாநிலத்தவருக்கு ஆச்சர்யத்தை அளிப்பதாக உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கோட்டக் குளங்கராவில் ஸ்ரீதேவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 2 நாட்களுக்கு சமயவிலக்கு எனும் திருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த வியாழன் அன்று தொடங்கிய இந்த திருவிழா 2 நாட்களாக நடைபெற்று வெள்ளிக் கிழமையுடன் முடிந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா பிரச்னை காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 -ல் திருவிழா நடைபெறவில்லை.
இந்த திருவிழாவின் கடைசி நாளின்போது பெண்களைப் போன்று ஆண்கள் சேலை, சுரிதார், கசாவு சேலை, நகைகள், தலைக்கு விக் உள்ளிட்டவற்றை அணிந்து நாள் முழுவதும் காட்சி அளித்தனர். இந்த சடங்கை செய்த ஆண்களுக்கு அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேக் அப் செய்தார்கள்.
இதைப்போன்று சடங்குகளை செய்யும் ஆண்களுக்கு நல்ல வேலை, செல்வம், வசதிகள் உள்ளிட்டவை துர்கா தேவியால் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
முன்னொரு காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், தேங்காய் பறிப்பதற்காக கல் ஒன்றை எடுத்து வீசியுள்ளனர். வீசப்பட்ட கல்லில் இருந்து இரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன அவர்கள் நடந்த விபரத்தை ஊர் பெரியவர்களிடம் கூற, அவர்கள் பூசாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர். இறுதியாக கல் எடுக்கப்பட்ட இடத்தில் இந்த துர்கா தேவி கோயில் கட்டப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.