கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பிரம்மபுரத்தில், 16 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. கடந்த 2008ல் துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில், நாள்தோறும் ஒரு லட்சம் கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவற்றில், 1 சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்கு எடுக்கப்படுவதாகவும், மீதமுள்ள 99 சதவீத கழிவுகள் இங்கேயே போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி, இந்தக் குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாக பல பகுதிகளுக்கும் தீ பரவியதை அடுத்து, குப்பைக் கிடங்கின் அனைத்துப் பகுதிகளிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பெரும்பாலான பகுதியில் தீ அணைக்கப்பட்ட நிலையில், இந்த விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம், சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது. மயக்கம், வாந்தி, தலைச்சுற்றல், இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இப்பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.
பிரம்மபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள டாக்டர்கள் குழுவினர், வீடு வீடாகச் சென்று பரிசோதனைகள் செய்து வருகின்றனர். தீ முழுவதும் அணைக்கப்படாத நிலையில், தீயை முற்றிலும் அணைக்க உரிய நடவடிக்கை எடுத்து வரும் கேரள அரசு, புகை மண்டலத்தால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எர்ணாகுளம் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள், அங்கன்வாடிகள் என அணைத்து கல்வி நிலையங்களுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எர்ணாகுளம் மாநகராட்சிக்குபட்ட திரிகாக்காரா, திரிப்பணித்துரா மற்றும் மாறாடு உள்ளிட்ட பகுதிளிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, கொச்சி நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட நகராட்சி அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள் ஆகியவற்றிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் நரைச் சுற்றி மட்டுமல்லாமல், வடுவங்கோடு, புத்தன்குரூஸ், கிழக்கம்பலம் மற்றும் குன்னத்துந்நாடு உள்ளிட்ட கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரம்புரம் குப்பைக் கிடங்கில் தீயை முழுவதுமாக அணைத்து, புகை மண்டலம் இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொக்லைன் இயந்திரம், ஜேசிபி உள்ளிட்ட நவீன இயந்திரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீரடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fire accident, Kerala, School Leave