• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகளிடம் இருந்து குழந்தையை பிரித்த தந்தை.. கணவருடன் இளம்பெண் போராட்டம் -சிக்கும் கம்யூனிஸ்ட் பிரமுகர்

மகளிடம் இருந்து குழந்தையை பிரித்த தந்தை.. கணவருடன் இளம்பெண் போராட்டம் -சிக்கும் கம்யூனிஸ்ட் பிரமுகர்

கேரளா அனுபமா

கேரளா அனுபமா

என் குழந்தையை என்னிடம் இருந்து பறித்துச் சென்றவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இளம்பெண் அனுபமா குமுறுகிறார்.

  • Share this:
    இது கேரளாவுக்கு அவமானம். எனக்கு என் குழந்தை வேண்டும்.. என்ற பதாகையுடன் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் போராட்டத்தில் இறங்கியுள்ளார். யார் இந்தப்பெண்.. இவருடைய குழந்தைக்கு என்னவானது விரிவாக பார்க்கலாம்..

    கேரளாவைச் சேர்ந்த அனுபமாவுக்கு கடந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முதல்பிறந்தநாளை கொண்டாட வேண்டிய இந்த வேளையில் குழந்தையை தேடி அழைந்துக்கொண்டிருக்கிறார் அந்தப்பெண். குழந்தை பிறந்து மூன்று நாள்களில் தாயிடம் இருந்து குழந்தையை பிரித்துச் சென்றுவிட்டனர். இந்தச் செயலை செய்தது வேறு யாரும் இல்லை அனுபமாவின் தந்தை ஜெயச்சந்திரன். ஜெயச்சந்திரன் ஆளும் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். தனக்கு பிடிக்காத திருமணத்தை மகள் செய்துக்கொண்டதால் குழந்தையை பிரித்ததாக கூறப்படுகிறது.

    அனுபமாவின் கணவர் அஜித் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். திருமணமான நபரை மகள் காதலிப்பது அனுபமாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. மேலும் அஜித் கிறிஸ்தவர் என்பதால் மாற்று மதத்தவரை மகள் திருமணம் செய்துக்கொள்ள அனுபமாவின் பெற்றோர்கள் விரும்பவில்லை. அனுபவமாவும் அஜித்தும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழத்தொடங்கினர். அஜித் முதல் மனைவியை விவாகரத்து செய்யாததால் அனுபமாவை திருமணம் செய்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. முதலில் அனுபமா தனது காதலை வீட்டில் கூறவில்லை.

    அவரது வயிற்றில் அஜித்தின் கரு வளரத்தொடங்கியதும் தனது காதல் விவகாரத்தை கூறியுள்ளனர். வீட்டில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. தங்கையின் திருமணத்துக்கு பின் உன் விவகாரத்தை பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறியதால் அவர் அமைதியடைந்துள்ளார். அதன்பின் காதலன் அஜித்துடன் சென்றுவிட்டார். இந்நிலையில்தான் கடந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்த மூன்று நாளில் குழந்தையை அனுபமாவிடம் இருந்து அவரது குடும்பத்தினர் பிரித்து சென்றுள்ளனர். தங்கை திருமணம் முடிந்ததும் குழந்தையை திருப்பி தருவதாக கூறியுள்ளனர். அவரது தங்கைக்கு திருமணம் நடந்து முடிந்தும் குழந்தையை தரவில்லை. இந்நிலையில் அவர் ஏப்ரல் மாதம் அஜித் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தார். காவல்துறையில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.

    விசாரணையில் அனுபமாவின் சம்மதத்துடன் தான் குழந்தையை தத்து கொடுத்தேன் என ஜெயச்சந்திரன் கூறுகிறார். அதற்கான கடிதத்தையும் ஆதாரமாக காட்டியுள்ளார். அப்போது அனுபமா உடல் அளவில் மனதளவிலும் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவரால் குழந்தையை பராமரிக்க முடியாது என்பதால் அவரது சம்மதத்துடன் குழந்தையை தத்து கொடுத்ததாக கூறியுள்ளார். இதனை அனுபமாவும் அவரது கணவர் அஜித்தும் முற்றிலுமாக மறுக்கின்றனர். முதலில் அனுபமாவின் கருவை கலைக்க முடிவு செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் ஒத்துழைக்காததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என அஜித் கூறுகிறார்.

    அனுபமா வீதியில் இறங்கி போராட்டத் தொடங்கியதும் ஊடகங்கள் வாயிலாக இந்த செய்தி கேரளா முழுவதும் தீயாய் பரவியது. எதிர்க்கட்சிகள் இவ்விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பத்தொடங்கினர். இதனையடுத்து தற்போது கேரள அரசு இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. போலீஸார் விசாரணையில் குழந்தையை தத்து கொடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகம் முன்பாக அந்தப்பெண் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “ என் குழந்தையை என்னிடம் இருந்து பறித்துச் சென்றவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரள அரசு இந்த விவகாரத்தில் தலையீட்டு எனக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

    இதற்கிடையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணயில் அனுபமாவுக்கு பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தாய் என அனுபமா சந்திரன் என சரியாக உள்ளது. தந்தை பெயர் அஜித் என்று இல்லாமல் ஜெயக்குமார் என  உள்ளது. முகவரியும் தவறான பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அக்டோபர் 19-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தனியார் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் கிராம பஞ்சாயத்து மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை இப்போது யார் தத்தெடுத்தார்கள். குழந்தை எங்கு உள்ளது என்பது மர்மமாகவே உள்ளது.

    இதற்கிடையில் அஜித்தின் முதல் மனைவி அனுபமாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். குழந்தையை தத்து கொடுக்கும் போது அனுபமா சுய நினைவோடு தான் இருந்தார். நான் அவரது வீட்டுக்கு சென்று என் கணவரை விவாகரத்து செய்ய மாட்டேன் எனக் கூறிய பின்னர்தான் குழந்தையை தத்து கொடுக்க சம்மதித்தார்.அனுபமாவால் நான் என் கணவரை விவகாரத்து செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: