கேரள தேர்தல்: சிபிஎம் வேட்பாளர் பட்டியலில் 5 அமைச்சர்கள், 33 எம்.எல்.ஏக்களுக்கு கல்தா!

சிபிஎம்

தாமஸ் ஐசக், ஜி.சுதாகரன், ஜெயராஜன், ஏ.கே.பாலன் மற்றும் ரவீந்திரநாத் ஆகிய 5 அமைச்சர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 5 அமைச்சர்கள், 33 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியின் தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலுக்கான 83 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. கடந்த தேர்தலில் 92 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம், இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு 55 தொகுதிகளை விட்டுக்கொடுத்ததால் 85 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இதில் தமிழக எல்லையான இடுக்கி மாவட்டம் தேவிகுளம் மற்றும் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. சிபிஎம் கட்சியானது 74 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, மீதம் உள்ள 9 தொகுதிகளில் சுயேட்சைகளுக்கு ஆதரவளித்துள்ளது.

சிபிஎம் வெட்பாளர் பட்டியலில் 5 அமைச்சர்கள் மற்றும் 33 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தாமஸ் ஐசக், ஜி.சுதாகரன், ஜெயராஜன், ஏ.கே.பாலன் மற்றும் ரவீந்திரநாத் ஆகிய 5 அமைச்சர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சிபிஎம் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 4 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் சிபிஎம்-ன் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐயின் நிர்வாகிகள். மேலும் இப்பட்டியலில் கடந்த முறையை போலவே 12 பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

30 முதல் 40 வயதுக்கு இடையில் 8 பேரும், 40 முதல் 50 வயதுக்கு இடையில் 13 பேரும், 51 முதல் 60 வயதுக்கு இடையில் 33 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 24 பேரும் பட்டியலில் உள்ளனர்.

மேலும் சிபிஎம்-ன் வேட்பாளர் பட்டியலில் பட்டதாரிகள் 42 பேரும், வழக்கறிஞர்கள் 22 பேரும், முதுகலை பட்டதாரிகள் 14 பேரும், பிஎச்.டி அறிஞர்கள் இருவரும், கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரும், மருத்துவர்கள் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.

எஞ்சிய இரண்டு தொகுதிகளில் மஞ்சேஸ்வரம் தொகுதி வேட்பாளராக ரமேஷன் என்பவரை சிபிஎம் இன்று அறிவித்தது. தேவிகுளம் தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: