முகப்பு /செய்தி /இந்தியா / போட்டோ ஷூட்டில் ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை உயிரிழப்பு... மணப்பெண் கவலைக்கிடம்

போட்டோ ஷூட்டில் ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை உயிரிழப்பு... மணப்பெண் கவலைக்கிடம்

புதுமணத் தம்பதி ரெஜிலால் - கனிகா

புதுமணத் தம்பதி ரெஜிலால் - கனிகா

இருவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அங்கிருந்த உறவினர்கள் மத்தியில் பெரும் பதற்றம் காணப்பட்டது.

  • Last Updated :

போட்டோ ஷூட் நடத்தியபோது புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மணப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகிழ்ச்சிக்காக நடத்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் இப்படி துயரத்தை ஏற்படுத்தி விட்டதே என்று பொதுமக்கள் பரிதாபத்துடன் கூறி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெரம்பரா அருகேயுள்ள கடியாங்காட்டை சேர்ந்தவர் ரெஜிலால். 28 வயதாகும் இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த கனிகா என்பவருக்கும் இடையே கடந்த மாதம் 14-ம்தேதி திருமணம் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் ஜனகிக்காடு அருகேயுள்ள குட்டியடி ஆற்றில் சில நாட்களுக்கு முன்பாக ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இருவரும் மகிழ்ச்சியாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாறையில் தடுக்கி ஆற்றுக்குள் விழுந்தனர்.

இருவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அங்கிருந்த உறவினர்கள் மத்தியில் பெரும் பதற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டார்கள். பின்னர் ஒருவழியாக ரெஜிலாலும், கனிகாவும் மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

இந்த சம்பவத்தில் மூச்சுத் திணறி ரெஜிலால் உயிரிழந்தார். பாறைகளில் மோதி படுகாயம் அடைந்த கனிகா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் பெருவன்னாமுழி போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் மரணக்குழிகள் இருப்பதாகவும், இதுபற்றி அங்கு வந்தவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றும் தெரிவித்தனர். மணமக்களையும், குடும்ப உறவுகளையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய போட்டோஷூட், மணமக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டத என்று நெட்டிசன்கள் சோகத்துடன் கூறி வருகின்றனர்.

First published: