ஹோம் /நியூஸ் /இந்தியா /

2 பெண்களை கொடூரமாக கொன்று குக்கரில் சமைத்து சாப்பிட்ட கேரள தம்பதி

2 பெண்களை கொடூரமாக கொன்று குக்கரில் சமைத்து சாப்பிட்ட கேரள தம்பதி

கேரளா நரபலி

கேரளா நரபலி

Crime News | கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்து, அவர்களின் உடல்களை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிதக்கறி சாப்பிட்ட தம்பதி வாக்குமூலத்தில் கூறியிருப்பதென்ன?

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Kerala, India

    கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்து, அவர்களின் உடல்களை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிதக்கறி சாப்பிட்ட தம்பதி வாக்குமூலத்தில் கூறியிருப்பதென்ன?

    செல்வ செழிப்பிற்காக 2 பெண்களை நரபலி கொடுத்த பரபரப்பு அடங்குவதற்குள், இளமையாக வாழ்வதற்கு அவர்களின் உடல்களை சமைத்து சாப்பிட்டதாக தம்பதி கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர்.கடந்த ஜுன் மாதத்தில் இருந்து ரோஸ்லினும், செப்டம்பர் மாதத்தில் இருந்து பத்மாவையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, இருவரின் செல்போன்களும் கடைசி சிக்னலாக  பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற பகுதியை காட்டியது.அவர்களின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக போலி மந்திரவாதியான முகமது ஷபி என்பவர் பேசியிருப்பதும் தெரியவந்தது.

    உடனே முகமது ஷபியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களையும் நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்தார். திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத வைத்தியர் பகவல்சிங் - லைலா தம்பதி. பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் முகமது ஷபி என்ற போலி மந்திரவாதியிடம் யோசனை கேட்டுள்ளார் பகவல்சிங்.

    பணக்காரர் ஆவதற்கான சிறப்பு பூஜை என்றுக்கூறி பகவல்சிங் கண் முன்னே அவரது மனைவி லைலாவுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டார் முகமது ஷபி.

    பெரும்பாவூரில் தனக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வ செழிப்பும், மேன்மையும் ஏற்படும் என்று முகமது ஷபி கூறியுள்ளார்.இதற்கு நரபலி கொடுக்க வேண்டும் என்றும் முகமது ஷபி கூறியுள்ளார்.

    இதற்காக பகவல்சிங்சிடம் இருந்து ரூ.10 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்ட அவர், நரபலி கொடுக்க பெண்ணை தேடி வந்தார்.அப்போது ரோஸ்லினை சந்தித்து சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி பகவல்சிங்-லைலா தம்பதி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    ரோஸ்லினை சினிமா சூட்டிங் என நம்பவைத்து உடைகள் இல்லாமல் கட்டிலில் கட்டி வைத்து, தலையில் சுத்தியலால் அடித்தும், கழுத்தை கத்தியால் அறுத்தும் மூவரும் சேர்ந்து நரபலி கொடுத்துள்ளனர்.

    பின்னர் உடலில் ரகசிய இடத்தில் கத்தியால் அறுத்து அங்கிருந்து வரும் ரத்தத்தை வீட்டின் சுற்றுப்புறத்தில் தெளித்துள்ளனர்.நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லின் உடலை சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடனும், இளமையாகவும் இருக்கலாம் என்று முகமது ஷபி கூறியதால், ரோஸ்லின் உடலின் சதை பகுதிகளை வெட்டி, குக்கரில் வைத்து சமைத்து பகவல்சிங்-லைலா தம்பதி சாப்பிட்டுள்ளனர்.

    கடந்த ஜுன் மாதம் இந்த நரபலி சம்பவம் நடந்துள்ளது.நரபலி கொடுக்கப்பட்ட பின்னரும் தம்பதி வீட்டுக்கு ஐஸ்வர்யம் கிடைக்கவில்லை.இதுகுறித்து முகமது ஷபியிடம் தம்பதி கேட்டபோது, மேலும் ஒரு நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறி, மேலும் ரூ.10 லட்சம் வாங்கியிருக்கிறார்.

    இதையடுத்து முகமது ஷபி பத்மாவை சந்தித்து சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், பல லட்சம் தருகிறேன் என்றும் கூறி தம்பதி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.ரோஸ்லினை கொலை செய்ததுபோலவே பத்மாவையும் நெத்தியில் சுத்தியால் அடித்தும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர்.

    பத்மாவிடம் இருந்தும் ரத்தத்தை எடுத்து வீட்டை சுற்றி தெளித்து, அவரது உடலையும் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி வீட்டருகே உள்ள தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

    புதைக்கப்பட்ட பெண்களின் உடல் பாகங்களை தோண்டி எடுத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், அவரது மனைவி லைலா, போலி மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    முகமது ஷபி மீது கஞ்சா கடத்தல், பாலியல் வன்கொடுமை, பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துதல் உட்பட 8 வழக்குகள் ஏற்கனவே உள்ளன.

    75 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கும் இவர் மீது உள்ளது.நரபலி கொடுக்கப்பட்ட பத்மா தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை பகுதி அடுத்த எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்.இவருக்கு ரங்கநாதன் என்ற கணவரும், சேட்டு, செல்வராசு என இரண்டு மகன்களும் உள்ளனர்.குடும்ப வறுமை காரணமாக பத்மா கேரளாவில் தங்கி லாட்டரி விற்பனை செய்து வந்துள்ளார்.

    Read More: 60 துண்டுகளாக வெட்டி சடலத்தை சாப்பிட்ட கொடூரம்... கேரள நரபலி சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

    பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது குடும்பத்தினர் கேரளா சென்றுள்ளனர்.பத்மா கொலை செய்யப்படுவதற்கு முன்பாக சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

    பணக்காரர் ஆக வேண்டும் என்பதற்காக  இரண்டு பெண்களை கொடூரமான முறையில் நரபலி கொடுத்து, அவர்களின் உடலை சமைத்து சாப்பிட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

    Published by:Srilekha A
    First published:

    Tags: Kerala, Murder