வெள்ளத்தால் தவித்து வரும் கேரளாவில் நாளை முதல் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே மழை வெள்ளத்தால் 19,500 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த 8-ஆம் தேதி முதல் கேரளாவில் கொட்டி தீர்த்து வரும் மழை காரணமாக, மாநிலமே உருக்குலைந்துள்ளது. எங்கும் வெள்ளக்காடான நிலையில், முப்படையினருடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு, ஒடிசா தீயணைப்பு வீரர்கள் உள்பட பல அமைப்புகள் முழு வீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தீவிர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அது 3 மாவட்டங்களாக குறைக்கப்பட்டது.
இதில் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொச்சி பகுதியில் வீட்டின் கூரையில் தஞ்சம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். கடங்கலூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 10 மாத குழந்தையை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மழை வெள்ளத்தால் 19, 500 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசு போதிய ஒத்துழைப்பு அளித்து வருவதாக தெரிவித்த அவர், பிற மாநிலங்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள 3,026 முகாம்களில் சுமார் 3.50 லட்சம் பேர் தங்கியுள்ளனர். மாநிலத்தில் உள்ள 134 பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், 16, 000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.