ரூ.3 லட்சம் நிதியுதவி: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக பினராயி விஜயன் அறிவிப்பு

பினராயி விஜயன்

இந்தியாவில் பெற்றோரைக் கொரோனாவுக்கு பறிகொடுத்த குழந்தைகள் அதிகமாகி வருகின்றனர்.

 • Share this:
  கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்கத்தில் ரூ.3 லட்சம் நிதியுதவியும், 18 வயதுவரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகையும் கேரள அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

  கொரோனா வைரஸால் பல மாநிலங்களில் பெற்றோர் இருவரையும் இழத்தல், தாய், தந்தை இருவரில் ஒருவரை இழத்தல் போன்ற பரிதாப நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். கொரோனா வைரஸால் ஏற்கெனவே குழந்தைகளின் கல்விச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பச்சூழலும் வேதனைக்குரியதாக மாறி குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்குகிறது.

  கேரள அரசும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

  கொரோனா வைரஸால் மாநிலத்தில் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தைகளுக்காக சிறப்பு உதவித்திட்டத்தை கேரள அரசு கொண்டு வந்துள்ளது.

  பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாப்பது அவசியமானது. இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்க உதவித்தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதன்பின் 18வயதுவரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அந்த குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை அதற்கான கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

  கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 24,166 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாஸிட்டிவ் சதவீதம் 17.87 ஆக குறைந்துள்ளது. 181 பேர் உயிரிழந்துள்ளனர். பத்தினம்திட்டா, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அதைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  மூக்குக்கண்ணாடி கடை, ரிப்பேர் கடைகள், செல்போன் ரிப்பேர் கடைகள், கணினி ரிப்பேர் கடைகள் போன்றவை அடுத்த 2 நாட்களுக்கு மட்டும் திறக்கப்படும்.

  இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
  Published by:Muthukumar
  First published: