கேரள மாநில சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தர்மடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பினராயி விஜயன், வேட்புமனு தாக்கல் செய்தார்.
மனந்த்வாடி தொகுதியில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட மணிகண்டன் போட்டியிட மறுத்துள்ளார். தாம் தற்போது கட்சியில் இல்லை என்றும், பணியில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சுரேஷ்கோபி, நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு வங்கம் மாநில தேர்தல் களமும் பரபரப்பாகக் காணப்படுகின்றது. “காலில் ஏற்பட்ட காயம் குறித்து கவலைப்படும் மம்தா பானர்ஜி, வன்முறையில் கொல்லப்பட்ட 130 பாஜக தொண்டர்களின் தாயின் வலியை உணரவில்லை” என மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
பங்குரா பகுதியில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சதி திட்டத்தால் தாக்கப்பட்டு காலில் காயம் ஏற்பட்டதாக மம்தா கூறுவதாகவும், ஆனால் விபத்தால் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்ட அவர், ஆனால், வன்முறையில் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களை பற்றி மம்தா எண்ணவே இல்லை எனவும் கூறினார்.
புருலியா பகுதியில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில், சக்கர நாற்காலியுடன் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அதிர்ஷ்டவசமாக தாம் உயிர் பிழைத்ததாக கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தேபாஸ்ரீராய் கட்சியில் இருந்து விலகினார்.
இதேபோல, அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் சூழலில், வரும் 27ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது.
Must Rerad : ஏப்ரல் 6-ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும் - தொழிலாளர் ஆணையம் உத்தரவு
அங்குள்ள சோனிட்பூரில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பாஜகவின் 60 மாத ஆட்சி, மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளதாக கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.