கேரளாவில் நேற்று திறக்கப்பட்ட கண்ணூர் விமான நிலையம் மூலம் இந்தியாவின் நான்கு சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக கேரளா உள்ளது. எனினும், தமிழகத்தில் 4 சர்வதேச விமான நிலையங்கள் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் நான்காவது சர்வதேச விமான நிலையமாக கண்ணூர் விமான நிலையம் திறக்கப்பட்டது. கண்னூர் விமான நிலையத்தை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
முதலாவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 186 பயணிகளுடன் அபு தாபிக்குப் பயணமானது.
கேரளாவில் ஏற்கெனவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இதில் நான்காவதாக கண்ணூர் சர்வதேச விமான நிலையம் இணைந்துள்ளது.
கண்ணூர் சர்வதேச விமான நிலையம் மலபார் மற்றும் கண்ணூரின் கலச்சார பிரதிபலிப்பாக மட்டும் இல்லாமல் அருகில் கர்நாடகாவில் உள்ள குடகுவின் கலாச்சாரப் பெருமையை பறைசாற்றுவதாகவும் உள்ளது.
வளைகுடா நாடுகளில் அதிகமுள்ள கேரள மக்களுக்கு இந்த விமான நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
இந்நிலையில், அதிக சர்வதேச விமான நிலையங்களை கொண்ட மாநிலம் என்று கேரளாவை குறிப்பிடும் போது, பலர் தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி என நான்கு சர்வதேச விமான நிலையங்கள் இருப்பதாக கருத்து பதிவிட்டனர்.
இந்த பிரச்னை சமூக வலைதளங்களில் கருத்து மோதலாக வெடித்தது.

சென்னை சர்வதேச விமான நிலையம்
உண்மையில், தமிழகத்தில் இருப்பது 3 சர்வதேச விமான நிலையங்களே. சென்னை, கோவை மற்றும் திருச்சி மட்டுமே சர்வதேச விமான நிலையங்களை கொண்டுள்ளது.
மதுரையில் இருந்து சில வெளிநாட்டு நகரங்களுக்கு சேவை வழங்கப்பட்டு வந்தாலும், அது “கஸ்டம்ஸ் விமான நிலையம்” என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
கஸ்டம்ஸ் விமான நிலையம் என்றால், அதன் மிக முக்கிய நோக்கம் சரக்குகளை கையாள்வது மட்டுமே. 2011-ம் ஆண்டில் மதுரை விமான நிலையம் கஸ்டம்ஸ் விமான நிலையமாக கொண்டுவரப்பட்டது.
பொதுவாக கஸ்டம்ஸ் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு நகரங்களுக்கு விமான சேவை அளிக்கப்படுவது இல்லை. ஆனால், அருகில் இருக்கும் வெளிநாட்டு நகரங்களுக்கு சேவை அளிக்க வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் விமானம் இயக்கப்படுகிறது.
மற்ற விமான நிலையங்களைப் போலவே மதுரையில் இருந்தும் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது.
வெளிநாட்டுக்கு விமானம் இயக்கினாலே, அதனை சர்வதேச விமான நிலையம் என்று கூறிவிட முடியாது.
எடுத்துக்காட்டாக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்துகூட இலங்கைக்கு விமானம் இயக்கப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் என்று குறிப்பிட முடியாது.
மேலும் பார்க்க: அதிமுக, அமமுக இணைப்பு சாத்தியமா? தங்க தமிழ்ச்செல்வன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.