கேரளாவில் பேருந்து ஆட்டோ கட்டண உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய கட்டணங்கள் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டமன்றத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய கட்டணங்கள் மே 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. கட்டண உயர்வு தொடர்பான அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும்.
புதிய கட்டணங்களின்படி, முதல் 2.5 கிலோமீட்டருக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.8ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்படும். கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கட்டணம் 90 பைசாவில் இருந்து ரூ.1 ஆக உயர்த்தப்படும். கே.எஸ்.ஆர்.டி.சி விரைவு பயணிகள், சூப்பர் பாஸ்ட் மற்றும் டீலக்ஸ் சேவைகளின் கட்டணங்கள் அதற்கேற்ப மாறும்.
ஆட்டோ கட்டணங்களை பொருத்தவரையில், முதல் 1.5 கிலோமீட்டருக்கான ஆட்டோ கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆகவும், 5 கிலோ மீட்டர் வரையில், கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்குமேல், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.18 ஆக உயர்த்தப்படும்.
1500 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்படுகிறது. கூடுதல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கட்டணம் ரூ.17ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுகிறது.இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், உயர்த்தப்பட்ட கட்டணத்தில் மாற்றங்கள் ஏதும் கொண்டுவரலாமா என்ற யோசனையில் கேரள அரசு உள்ளது.
கடைசியாக 2018 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் திருத்தியமைக்கப்பட்ட போது, குறைந்த பட்ச பேருந்து கட்டணம் ரூ. 7-ல் இருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்பின்னரும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, அரசுப் பேருந்து போக்குவரத்து சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அவற்றை அரசு நிராகரித்து விட்டது.
கேரளாவில் 12,500 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு நடத்தும் மாநில போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 6,500 பேருந்துகள் மட்டுமே உள்ளன. இதனால், அரசை விட தனியார் பேருந்துகளே, மக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்பவையாக உள்ளன. கட்டண உயர்வுக்கு எரிபொருள் உயர்வே முக்கிய காரணம் என்று போக்குவரத்து துறையினர் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.