கேரள வேளாண் அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று

அமைச்சர் சுனில் குமார்

கேரள வேளாண் அமைச்சர் சுனில் குமாருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Last Updated :
 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பாதிப்பின் அளவு இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ஏப்ரல் 11 முதல் 14ம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை மத்திய அரசு நடத்தியது.

  எனினும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமலும், தேவையான வசதிகள் இல்லாமலும் பல்வேறு மாநிலங்கள் திணறுகின்றன. படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், தடுப்பூசி இல்லாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. மத்திய அரசின் தொகுப்பில் இருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனப் பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. தொடர்ந்து, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

  இந்நிலையில் புதன்கிழமை மாலை கேரள வனத்துறை அமைச்சர் சுனில் குமாருக்கு கொரோனா தொற்று இரண்டாவது முறையாக கண்டறியப்பட்ட நிலையில், திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சில நாட்களாக ஜலதோஷம், வாசனை தெரியாமல் இருந்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளார்.

  அதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் நிரஞ்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் சுனில் குமாருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்து வைத்திருந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும், அறிகுறிகள் இருந்தால் சோதனைகள் மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சுனில் குமார் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஏப்ரல் 8ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்றிலிருந்து மீண்ட அவர் நேற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: