18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப் தவிர்த்து பிற நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் அதே நேரத்தில் தனிப்பெரும் கட்சியாக ஆம் ஆத்மி வர வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகளில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு ஆட்சியை பிடிப்பதில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கட்சியில் அண்மை காலமாக உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. அங்கு முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் திடீரென ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சரன்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவர் பின்னர் தனது ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கினார்.
Also read:
ஒரு நாள் முழுதும் ஐஸ் பாக்ஸில் இருந்தும் உயிருடன் மீண்ட நபர்.. இறந்தவர் உயிர்பிழைத்தது எப்படி?
இப்படி ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு கரைசேர ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரமும், அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் தருவோம் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்த தேர்தல் வாக்குறுதிகளின் மூலம் பஞ்சாபில் காங்கிரஸுக்கு சவால் ஏற்படுத்தியிருக்கும் கெஜ்ரிவால் தற்போது மேலும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 18 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் அனைவருக்கும் மாதா மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், வங்கி கணக்குகளின் மூலம் நேரடியாக இந்த பணம் பெண்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Also read:
தன் உயிரைக் கொடுத்து இருவரின் உயிரை காப்பாற்றிய காவலர் - 18 மாத குழந்தையின் தந்தை வீரமரணம்!
இது உலகில் இதுவரை எந்த அரசாங்கமும் செய்திராத பெண்களுக்கான உதவித் தொகை திட்டமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் வயதான பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் முதியோர் பென்ஷனுடன் சேர்த்து இந்த தொகையும் அவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.