ஜூன் வரை 12ம் வகுப்பு மாணவர்களை அழுத்தத்தில் வைத்திருப்பது சரியல்ல - பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

ஜூன் மாதம் வரை 12ம் வகுப்பு மாணவர்களை தேவையற்ற அழுத்தத்தில் வைத்திருப்பது சரியானது அல்ல என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் உச்சகட்டமாக 1.82 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 4-ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்க இருந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஜூன் 1-ம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும். ஒருவேளை சூழல் தேர்வு நடத்த ஏதுவாக இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாக, தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம் வரை 12ம் வகுப்பு மாணவர்களை தேவையற்ற அழுத்தத்தில் வைத்திருப்பது சரியானது அல்ல என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இறுதியாக மத்திய அரசு 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதேபோல், 12ம் வகுப்பு தேர்வு குறித்தும் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஜூன் மாதம் வரை மாணவர்களை தேவையற்ற அழுத்தத்தில் வைத்திருப்பது சரியானது அல்ல. அது நியாயமற்றது. அதனால், இப்போதே 12ம் வகுப்பு தேர்வு குறித்து இறுதி முடிவை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: