சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் போபால் மக்களவை உறுப்பினர் பிரக்யா தாக்கூர். பல்வேறு தருணங்களில் இவர் பேசியவை அனைத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இந்து ஜாகரன வேதிகே அமைப்பின் தென்மண்டல மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய பிரக்யா தாகூர், “லவ் ஜிகாதிகளிடம் இருந்து நம் மகள்களை பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்துத்துவ செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவது குறித்து பேசிய அவர், “வீட்டில் எப்போதும் ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். அது இல்லை என்றால் காய்கறி நறுக்க வைத்துள்ள கத்திகளை கூர்மையாக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் எந்த நேரத்தில் என்ன சூழ்நிலை வரும் என்றெல்லாம் நமக்கு தெரியாது. காய்கறிகளை அது நன்றாக நறுக்கினால் அதுபோல நம்முடைய எதிரிகளின் தலையையும், வாயையும் நறுக்கும்” என்று கூறினார்.
மேலும், அனைவருக்கும் தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. நாடு அல்லது வீடு என எதற்கு எதிராக தாக்குதல் நடந்தாலும் அதற்கு உடனே எதிர்வினையாற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பு என்றும் அவர் பேசினார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங் கார்கே, “ஒரு மக்களவை உறுப்பினர் இவ்வாறான கருத்து தெரிவித்துள்ளது கெடுவாய்ப்பானது. அவர் ஏற்கனவே தீவிரவாத தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவர். அவரது பேச்சு தொடர்பாக நாங்கள் புகார் அளிக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.