சிவகங்கை தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்தி வந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக உடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அங்கு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் சிதம்பரம் எம்.பியாக இருப்பதால், கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் ஒதுக்க காங்கிரஸ் தலைமை மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
கார்த்தி சிதம்பரமே சிவகங்கையில் போட்டியிட அதிக வாய்ப்பு இருந்ததால், சுதர்சன நாச்சியப்பன் தவிர வேறு பெரிய தலைவர்கள் அங்கு மனு தாக்கல் செய்யவில்லை.
சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் ஒதுக்குவதிலும் அங்கே சிக்கல் இருக்கிறது.
விருதுநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாணிக் தாகூரின் சித்தப்பாவான சுதர்சன நாச்சியப்பனுக்கு தலைமை சீட் ஒதுக்காது என்றும் கூறப்படுகிறது. எனினும், சுதர்சன நாச்சியப்பனுக்கு ஆதரவாக முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இருந்தார்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தையே காங்கிரஸ் தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. எதிரணியில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தலிலும் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு நான்காவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Also See...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.