மக்கள் பின்பற்றும் மதம் தொடர்பாக பிரச்னைகளை கிளப்பி சமூகத்தை கர்நாடக அரசு சீரழித்து வருவதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா
குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு பாஜக மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது. இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது, அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு ஹலால் என்று விற்பனை செய்யப்படும் முஸ்லிம்கள் கடை இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் பிரச்னையை கிளப்பின.
தற்போது, மசூதிகளில் ஒலி பெருக்கிகளை வைக்கக் கூடாது என்று சில அமைப்புகள் பேசத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரங்கள் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சூழலில் மதம் தொடர்பாக பிரச்னைகளை கிளப்பி அரசியல் ஆதாயம் பெறுவதற்காக சமூகத்தை கர்நாடக பாஜக சீரழித்து வருகிறது. இதற்கு பாஜகவுக்கு கர்நாடக மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் ஒலி பெருக்கிகள் நீண்ட காலத்திற்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த மக்கள் பாதிப்பு அடைந்துள்ளார்கள்? சமூகத்தில் பிரச்னையை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பலவீனம் அடைந்து விட்டார்.
இதையும் படிங்க - கையில் சகோதரன் உடன் பாடம் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி - மணிப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்
சமூக விரோதிகள் கர்நாடகாவில் அமைதியை சீர்குலைக்கின்றனர். இது துரதிருஷ்டவசமானது. சமூக விரோதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதரிக்கிறாரா? அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளாரா?
ஒட்டுமொத்த கர்நாடக மக்களுக்கான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மீது உண்மையான அக்கறை பொம்மைக்கு இருக்குமானால், அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரது தோல்வி மக்களை அவதிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.