கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் ஆளும்
பாஜக அமைச்சரின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தீப் பாட்டில். இவர் இன்று காலை தனது நண்பர்கள் மற்றும் ஊடகங்களை தொடர்பு கொண்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அதிர்ச்சி அளிக்கும் விதமாக கூறியுள்ளார்.
பின்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார். அதில், "கர்நாடகா கிராம மேம்பாட்டு அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பா தான் தனது தற்கொலைக்கு ஒரே காரணம். என்னுடைய ஆசைகளை தூக்கி வைத்துவிட்டு தான் இந்த முடிவை எடுக்கிறேன். எனது,மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு உதவுமாறு பிரதமர் மோடி, முதலமைச்சர் பொம்மை, லிங்காயத்து தலைவர் எடியூரப்பா ஆகியோரிடம் இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறி உடுப்பியில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் ரூ.4 கோடி மதிப்பாலான திட்டத்திற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக சந்தோஷ் பாட்டில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதினார்.
திருப்பதியில் இலவச டோக்கன் பெறும் இடத்தில் கூட்ட நெரிசல்- காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதி
இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் புயலாக கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவின் 40 சதவீத அரசின் காரணமாக அக்கட்சி உறுப்பினரே உயிரிழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர், முதலமைச்சர் மெத்தனம் காட்டிவருகின்றனர் என சாடியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமய்யா தனது கண்டனப் பதிவை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அமைச்சரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சம்பந்தப்பட்ட நபரை தனக்கு தெரியாது என அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது என்ற முதலமைச்சர் பொம்மை, காவல்துறை சுதந்திரமான விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளியே கொண்டுவரும் என உறுதியளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.