Home /News /national /

பர்தாவுக்கு போட்டியாக காவித் துண்டு: கர்நாடக கல்லூரிகளில் தொடரும் சர்ச்சை

பர்தாவுக்கு போட்டியாக காவித் துண்டு: கர்நாடக கல்லூரிகளில் தொடரும் சர்ச்சை

hijab vs saffron

hijab vs saffron

கர்நாடகாவில் கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவிகளில் ஒருசிலர் காவித் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

    கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வருவதை கண்டித்து சில இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் மத ரீதியிலான சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கல்வி நிலையங்களில் எவ்வித மத ரீதியிலான ஆடையும் அணிய தேவையில்லை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் உடுப்பில் உள்ள குண்டாபூர் நகரில் செயல்படும் அரசு பள்ளி ஒன்று மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. எனினும், மாணவிகள் பர்தா அணிந்தே பள்ளிக்கு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.  பர்தா அணிந்தே பள்ளிக்கு வருவோம் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தலைமை ஆசிரியர் ருத்ர கவுடா, மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரலாம், ஆனால் வகுப்பறையில் பர்தா அணியக்கூடாது என்று தெரிவித்தார். தற்போது இந்த உடை சர்ச்சை கல்லூரிகளுக்கும் பரவியுள்ளது. கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவிகளில் ஒருசிலர் காவித் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

    பாஜகவின் மாணவர் அமைப்பான எபிவிபி, விஷ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்றவை இந்த போராட்டத்தின் பின்புலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களின் இந்த உடை போராட்டம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  மாணவர்கள் மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணியக்கூடாது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: “கோமியம் குடிச்சிட்டு தயாரா இருங்க!” ட்விட்டரில் பதிவிட்டு நாடாளுமன்றத்தில் தெறிக்க விட்ட திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா


    மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்ட சீருடைகளை அணிய வேண்டும், மேலும் வகுப்புகளில் பர்தா அல்லது காவி சால்வை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.மாணவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்ற பள்ளிகள் அல்லது கல்லூரிகளுக்குச் செல்லக் கூடாது.   கல்வி கூடங்களில் சாதி, மதத்தை தாண்டி அனைவரும் ஒன்றே என்ற மனநிலை அனைவருக்கும் இருக்க வேண்டும்அவர்கள் ‘பாரத மாதாவின் குழந்தைகள்’ என்று நம்பிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Dress code, Karnataka, School

    அடுத்த செய்தி