கர்நாடகவில் கல்லூரிக்கு புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊடகத்திற்கு பேட்டியளித்த மாணவி, இந்து நண்பர்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர் என்றும் கல்விக்கு தான் முக்கியத்துவம் என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர ஒருசில கல்வி நிலையங்கள் தடை விதித்தன. இதை தொடர்ந்து ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாதது, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசில இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வர தொடங்கியது என இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நாளையும் விசாரணை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாண்டியாவில் உள்ள PES கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளார்.
காவி துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் மாணவியை முற்றுகையிட்டு ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். மாணவியும் பதிலுக்கு அல்லாஹு அக்பர் என்று ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பியபடி வகுப்பறையை நோக்கி முன்னேறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பர்தா அணிந்து வந்த மாணவியை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட மாணவர்கள் - வைரலாகும் வீடியோ
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக என்.டி.டி.வி. ஊடகத்திற்கு பேட்டியளித்த அம்மாணவி, ’ நான் பர்தா அணிந்திருந்ததால் அவர்கள் என்னை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கூறியதால் நான் அல்லாஹு அக்பர் என்று கத்தினேன். எனது இந்து நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர். காவித் துண்டு அணிந்திருந்தவர்கள் வெளியிலிருந்து வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அங்கிருந்தவர்களில் 10 சதவீதம் பேரை எனக்கு தெரியும். மற்றவர்கள் வெளியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். எங்களது முன்னுரிமை எங்களது கல்வி தான். அவர்கள் கல்வியை சீரழிக்கிறார்கள். ஹிஜாப் எங்களின் ஒரு அங்கம். கல்லூரி முதல்வர் எதுவும் பேசவில்லை. வெளியாட்கள் இதை ஆரம்பித்துள்ளனர். பர்தாவை எடுத்துச் செல்ல வேண்டாம் என கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஹிஜாபுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.ஒரு முஸ்லிம் பெண்ணாக இருப்பதன் ஒரு பகுதியே இது என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.