கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தொலைக்காட்சியில் ரத்தத்தையும் நெருப்பையும் பார்த்தால் நீதிபதிகள் சஞ்சலத்துக்கு உள்ளாவர்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கின் விசாரணை நாளையும் நடைபெறவுள்ளது.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து 4 மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித், 'நாம் பகுத்தறிவின்படியும், சட்டத்தின்படியும் செல்வோம், உணர்ச்சிகளால் அல்ல.. அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியல் சாசனம் எனக்கு பகவத் கீதை போன்றது’ என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் ஒன்று.இது புனித குர்ஆன் வகுத்துள்ள ஒரு முக்கிய மத நடைமுறையாகும் என்று தெரிவித்ததோடு, மெட்ராஸ், பம்பாய், கேரளா நீதிமன்றங்களின் தீர்ப்புகளை குறிப்பிட்டு வாதிட்டார். மேலும், நான் ஒரு பிராமணன், என் மகன் பள்ளிக்கு நாமம் அணிந்து செல்கிறான். இது பொது ஒழுங்கை பாதிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் சொல்ல முடியுமா?மனுதாரர்கள் ஹிஜாப் அணிந்து யாருக்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சீருடைகளை தீர்மானிக்க கல்லூரிகளுக்கு சுயாட்சி வழங்கப்படுகிறது. தளர்வு விரும்பும் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக் குழுவை அணுக வேண்டும் என்று கூறினார். அப்போது ஹிஜாப் அணிந்த மாணவிகளை தனியாக அமரவைப்பது, மதம் சார்ந்த தீண்டாமை என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கங்கையில் வீசப்பட்ட கொரோனா பாதிப்பு சடலங்களின் கணக்கு இல்லை: மத்திய அரசு
இதை தொடர்ந்து நீதிபதி, ‘அரசியலமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு பிரிவுதான் பிரச்சினையை எரிய வைக்கும். ஆனால் போராட்டம் நடத்துவது, வீதிக்கு செல்வது, கோஷம் எழுப்புவது, மாணவர்களைத் தாக்குவது, மாணவர்கள் பிறரைத் தாக்குவது, இவை நல்ல செயல் அல்ல.
நீதிமன்றத்தை தொந்தரவு செய்யாதீர்கள். நீதிபதிகளை அமைதியாக விட வேண்டும். நான் தொலைக்காட்சியில் நெருப்பையும் இரத்தத்தையும் கண்டால், நீதிபதிகள் சஞ்சலனத்திற்கு உள்ளாவர்கள். மனம் சஞ்சலனப்பட்டால் புத்தி வேலை செய்யாது. நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்துகொண்டு இருக்கும்போதே, வளாகத்திற்குள்ளேயும் வெளியேயும் நிறைய கலாட்டாக்கள் நடைபெறுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். வழக்கின் விசாரணை மீதமுள்ளதால் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்’ என்று கூறி வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.