கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் தவர்சந்திர கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் எந்த மதத்தினருக்கும் எதிரானது இல்லை என அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவையில் 2021 டிசம்பர் மாதம் மத சுதந்திர உரிமை சட்டம் எனப்படும் கட்டாய மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டம் மேலவையில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில, கடந்தவாரம் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை இதை அவசர சட்டமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
அடுத்த கூட்டத்தொடரில் இந்த சட்டம் மேலவையிலும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மதமாற்ற தடை சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகா உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா, இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அதை கடுமையாக அமல்படுத்தப்படும். இந்த சட்டத்தை காங்கிரஸ் அரசே கொண்டுவர திட்டமிட்டிருந்தது. எங்களது அரசு அதை வலுப்படுத்தி முறையாக நிறைவேற்றியுள்ளது. அதேவேளை, இந்த சட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. எந்த மதத்தின் உரிமையையும் பறிப்பதும் அல்ல என்றார்.
ஒரு நபரை கட்டாயமாகவோ, ஆசை காட்டியோ, மோசடி செய்தோ மதம் மாற்றம் செய்தால் அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சிறார்கள், பெண்கள், பட்டியல் இன மக்களை மேற்கண்ட விதமான முறைகளில் மத மாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படும்.அதேபோல், திருமணத்திற்காகவும் சட்டவிரோதமாக மதம் மாறினால் அந்த மதமாற்றம் செல்லுபடியாகாது என இந்த சட்டம் சொல்கிறது. இந்த குற்றத்திற்கு பிணையில்லா தண்டனை வழங்கப்படும். மதம் மாற விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் 30 நாளைக்கு முன்னதாக முறைப்படி பதிவு செய்து ஒப்புதல் வாங்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
இதையும் படிங்க:
பரோட்டா சாப்பிடுகிறேன்... நேர்மையான பதிலால் பலரின் உள்ளம் கவர்ந்த UBER ஓட்டுனர்..
இந்தியாவில் அருணாசல பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மத மாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது.அன்மையில் ஹரியானா சட்டப்பேரவையிலும் இந்த மத மாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.