கர்நாடகாவில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு முறையான கணக்கு காட்டாத மகன் மீது, தந்தை நெருப்பு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 சதவீத தீக் காயத்துடன் உயிருக்கு போராடிய மகன் நேற்று உயிரிழந்தார்.
பெங்களூரு நகரில் சாம்ராஜ்பேட் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுரேந்திரா. 51 வயதாகும் இவர் உலோக தொழிலை கவனிக்க தனது மகன் அர்பித்திடம் (வயது 25), ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கினார். இந்தப் பணத்தில் மைசூரு அருகே கட்டிடம் ஒன்றை அர்பித் வாடகைக்கு எடுத்துள்ளார்.
பின்னர், தான் அளித்த ஒன்றரை கோடி ரூபாய் பணம் குறித்த கணக்கு வழக்கை தந்தை சுரேந்திரா கேட்டுள்ளார். அப்போது, உரிய பதில் அளிக்காமல் அர்பித், அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த ஏப்ரல் 1-ம்தேதி வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே அரை மணி நேரமாக கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதையும் படிங்க - ''ஆங்கிலத்திற்கு மாற்றாக பிறமொழி மாநில மக்கள் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' - அமித் ஷா பேச்சு
முடிவில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுரேந்திரா, தனது மகன் மீது பெயின்ட் தின்னரை ஊற்றி, தீ வைத்தார்.
ஆரம்பத்தில், தீக்குச்சியை கொளுத்திய போது அது சரியாக பற்றவில்லை. அடுத்த முறை குச்சியை நன்றாக கொளுத்தி, மகன் மீது எறிய, தீ பற்றிக் கொண்டது.
இதையும் படிங்க - இ - சைக்கிள் வாங்கினால் சிறப்பு மானியம்.. பெட்ரோல் விலை ஏறும் காலத்தில் டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு
இதனால் அலறித் துடித்த அர்பித், அப்பா தீ வைத்து விட்டார் என்று கதறிக் கொண்டே ஓட்டம் பிடித்தார். பின்னர் ஆட்டோரிக்ஷாவில் ஏறி தனியார் மருத்துவமனையில் அர்பித் சிகிச்சை பெற்று வந்தார்.
60 சதவீத தீக்காயங்களுடன் அவர் உயிருக்கு போராடி வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற மகனையே பணத் தகராறு காரணமாக தீயிட்டு கொளுத்திய தந்தை சுரேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.