நீதித்துறையும், காவல்துறையும் பல வினோதமான வழக்குக்களை கையாளுவது உலகம் முழுவதும் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெறுவது நம்மை சிந்திக்க வைக்கும் சில நேரங்களில் சிரிப்பையும் வரவழைக்கும். அப்படி ஒரு வினோதமான புகார் ஒன்று நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பதிவாகி இருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சரியாக தீவனம் அளித்தும் கூட தனது 4 பசுக்களும் பால் கொடுக்காததாக, வளர்த்து வரும் பசு மாடுகள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடகாவின் பத்ராவதியில் உள்ள சிட்லிபுரா கிராமத்தைச் சேர்ந்த ராமையா என்ற விவசாயி போலீசாரிடம் அளித்த புகாரில், "தினமும் தவறாமல் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் எனது 4 பசு மாடுகளையும் மேய்ச்சலுக்கு விவசாய வயல்களுக்கு அழைத்து செல்கிறேன். ஆனாலும் கடந்த நான்கு நாட்களாக எனது பசுக்கள் பால் கொடுக்கவில்லை. எனவே போலீஸார் எனது மாடுகள் பால் கொடுக்க சம்மதிக்க வைத்து எனது பிரச்சனையை தீர்க்க வேண்டும்" என்று கூறி இருப்பதாக பிரபல ஊடக நிறுவனமான டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
தனது மாடுகள் மீது புகாரளிக்க விவசாயி ராமையா ஹோலேஹொன்னூர் (Holehonnur) காவல் நிலையத்தை அணுகி இருக்கிறார். ராமையாவின் புகாரை கேட்டு திகைத்து போன போலீஸ் அதிகாரிகள் என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று நொந்து கொண்டுள்ளனர். இதனிடையே இது போன்ற வினோதமான புகாரை எல்லாம் பதிவு செய்ய முடியாது என போலீசார் விவசாயி ராமையாவிடம் தெரிவித்தனர். பசுக்கள் மீதான புகாரை எடுத்து அவற்றை பால் கொடுக்க ஒத்துழைக்க வைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் போலீசார் நிராகரித்தனர். பின்னர் போலீசார் விவசாயியை ராமையாவை சமாதானப்படுத்தி ஒருவழியாக அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ALSO READ | 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய பிபின் ராவத்
இதனிடையே கடந்த மாதம் இதே போன்ற ஒரு சம்பவத்தில், மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது எருமையுடன் காவல் நிலையத்திற்கு சென்று பால் கறக்க மறுப்பதாக புகார் கூறி இருந்தார். அந்த விவசாயி அளித்த புகாரில், "சில கிராமவாசிகள் குறிப்பிட்ட எருமை மாடுமாந்திரீகத்தின் தாக்கத்தில் இருப்பதாக சில கிராமவாசிகள் என்னிடம் சொன்னார்கள்.
அதனால் தான் முன்பு போல ஒழுங்காக பால் கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார்கள். உரிய நடவடிக்கை எடுங்கள்" என்று கோரினார். இந்த புகாரை எடுக்க முடியாது என்று கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டனர் போலீசார். ஆனால் இந்த புகாரை அளித்த சுமார் 4 மணி நேரங்களுக்கு பிறகு, அந்த விவசாயி மீண்டும் தனது எருமையுடன் காவல் நிலையத்திற்கு வந்து மீண்டும் உதவியை நாடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.