• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கண்ணீர் வர வைத்த வெங்காயம் இந்த விவசாயியை கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது...!

கண்ணீர் வர வைத்த வெங்காயம் இந்த விவசாயியை கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது...!

விவசாயி மல்லிகார்ஜுனா

விவசாயி மல்லிகார்ஜுனா

  • News18
  • Last Updated :
  • Share this:
    வெங்காய விலை உயர்வு நாடு முழுவதும் பலருக்கு கண்ணீர் வர வைத்த நிலையில், விவசாயி ஒருவருக்கு புன்னகையை வர வழைத்துள்ளது.

    சில வாரங்களுக்கு முன் விளைச்சல் இல்லாதது, மழையால் பயிர்கள் சேதமடைந்தது உள்ளிட்ட காரணங்களால் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னையில் கிலோ வெங்காயம் ரூ.200 வரை சென்றது. ஸ்மார்ட்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என்று பல கடைகள் விளம்பரம் செய்தன.

    புதுமண தம்பதிகளுக்கு வெங்காயம் பரிசாக கொடுப்பது, தலைவர்களின் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு வெங்காயம் வழங்கியது என்று பல சம்பவங்கள் வெங்காய விலை உயர்வை வைத்து நடந்தன. தட்டுப்பாடு காரணமாக எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

    உள்நாட்டில் அறுவடைக்காலம் தொடங்கியதால் தற்போது வெங்காயம் விலை சற்றே குறைந்துள்ளது. இந்த நிலையில், வெங்காயம் விலை உயர்வால் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் தொட்டசித்தவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன். விவசாயியான இவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் வெங்காயம் பயிரிட்டு வருகிறார். கடந்த ஆண்டில் நல்ல விளைச்சல் இருந்த நிலையில் அறுவடைக்குப் பின்னர் முதலீடுகள் தவிர ரூ.5 லட்சம் அவருக்கு லாபமாக கிடைத்தது.

    இந்த ஆண்டில், வெங்காயம் விலை உயரும் என்று முன்பே கணித்த மல்லிகார்ஜூன் தனது 10 ஏக்கர் நிலம் உள்பட மேலும் 10 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் வாங்கி ரூ.15 லட்சம் செலவில் வெங்காயம் பயிரிட்டார். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மல்லிகார்ஜூன் 240 டன் அளவுக்கு வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்தார்.

    விலை உயரும் என்று மல்லிகார்ஜூன் கணித்தது மிகச்சரியான நிலையில், நாடு முழுவதும் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்தது. 240 டன் அளவுக்கு வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்ததன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் அவர் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

    ”ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் வெளியே கடன் வாங்கி, மற்றும் எனது கைவசம் இருந்த பணம் என மொத்தமாக ரூ.15 லட்சத்தில் வெங்காயம் பயிரிட்டேன். ஆனால், அக்டோபரில் வெங்காய விலை குறைவாகவே இருந்தது. இதனால், அறுவடை செய்யும் போது விலை வீழ்ச்சி அடைந்தால் என்ன செய்ய என்று கவலை அடைந்தேன்.

    ஆனால், நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்டவசமாக வெங்காய விலை உயந்தது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு குவிண்டால் வெங்காயத்தை ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்தேன். அதன்பிறகு சில நாட்களில் ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.12 ஆயிரத்தை தொட்டது. இதன்மூலம் எனக்கு அதிக லாபம் கிடைத்தது. இதனால் எனது கடனை அடைத்துவிட்டேன். புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். மேலும் நிலம் வாங்கி விவசாயத்தை விரிவுப்படுத்த உள்ளேன்.’ இவ்வாறு அவர் கூறினார்.

    மல்லிகார்ஜூனிடம் விவசாய பணியில் தினமும் 50 பேர் பணியாற்றி வருகிறார்கள். தற்போதைய வெங்காய விலை உயர்வால் திருட்டை தடுக்கும் பொருட்டு மல்லிகார்ஜூன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இரவில் தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: