ஹோம் /நியூஸ் /இந்தியா /

கர்நாடகாவில் குமாரசாமி அரசு நீடிக்குமா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

கர்நாடகாவில் குமாரசாமி அரசு நீடிக்குமா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

குமாரசாமி

குமாரசாமி

மாலை 4 மணிக்குள் விவாதத்தை நிறைவு செய்துவிட்டு 6 மணிக்குள் வாக்கெடுப்பை முடித்து விடுவோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நேற்றிரவு கடும் அமளிக்கிடையில் கர்நாடக சட்டப்பேரவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார். இன்று காலை 11 மணிக்கு அவை மீண்டும் கூட உள்ளது. குமாரசாமி அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பின் மூலம், இன்றாவது கர்நாடகாவின் அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

3 நாட்களாக நடைபெறும் விவாதம்

கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீதான விவாதத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். 3 நாட்களாக நடைபெறும் விவாதத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் நள்ளிரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆனால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒத்திவைக்கக் கோரி, ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சிவக்குமார் எச்சரிக்கை

சட்டப்பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், அதிருப்தி எம்எல்ஏக்கள் முட்டாளாக வேண்டாம் என்றும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அமைச்சர் சிவகுமார்

மேலும் நண்பர்களே நான் மீண்டும் எச்சரிக்கிறேன். முட்டாள்களாக இருக்காதீர்கள். அவர்கள் உங்களுக்கு குரங்கு குல்லாய் போடப்பார்க்கிறார்கள். சபாநாயகர் முன்னிலையில் நீங்கள் வந்து விளக்கம் அளிக்காமலோ, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலோ இருந்தால் நீங்கள் தகுதி இழப்பீர்கள். இதை சட்டம் தெளிவாக சொல்கிறது என்றார்.

குமாரசாமி ராஜினாமா? சமூக வலைதளங்களில் பரவும் செய்தி

அவை மீண்டும் கூடிய போது பேசிய முதலமைச்சர் குமாரசாமி, தனது ஆட்சியை கலைக்க சதி நடப்பதாகக் குற்றம்சாட்டினார். தான் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூட போலியான செய்தி உலா வருவதாகக் கூறினார்.

”ஆளுநரிடம் நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் இந்த செய்தி பரவி வருகிறது. இது போன்ற பொய் பிரச்சாரம் செய்யப்படுவது ஏன்?” என்று கூறினார்.

தொடர்ந்து சட்டப்பேரையில் விவாதம் நடைபெற்றது. இரவு 11.30 மணி வரை இந்த விவாதம் நீடித்தது. இறுதியாக அவையை ஒத்திவைக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் தேஷ்பாண்டே எடியூரப்பாவை கேட்டுக் கொண்டார். ஆனால் எடியூரப்பா அதை ஏற்க மறுத்துவிட்டார்.

மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-சபாநாயகர் அறிவிப்பு

நள்ளிரவை எட்டும் நேரத்தில் அவையை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாகவும், மாலை 6 மணிக்குள் விவாதம் நடத்தி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அறிவித்தார் சபநாயகர் ரமேஷ்குமார்.

தொடர்ந்து பேசிய சித்தராமையா, மாலை 4 மணிக்குள் விவாதத்தை நிறைவு செய்துவிட்டு 6 மணிக்குள் வாக்கெடுப்பை முடித்து விடுவோம் என்று கூறினார். இதையடுத்து உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியில் வந்தனர்.

மேலும் படிக்க... கர்நாடக முதல்வர்களின் நாற்காலிகள் ஆடிய கதை


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: BS Yeddyurappa, HD Kumaraswamy, Karnataka