கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு!

அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

news18
Updated: July 20, 2019, 7:15 AM IST
கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு!
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் துணை முதலமைச்சர் பரமேஷ்வரா
news18
Updated: July 20, 2019, 7:15 AM IST
கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் விதித்த இரண்டு கெடுவும் முடிவடைந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறமால் அவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு, ஆளுநர் வஜுபாய் வாலா கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், பெரும் பரபரப்பிற்கிடையே நேற்று காலை கர்நாடக சட்டப்பேரவை மீண்டும் கூடியபோது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்தபோது பேசிய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார், ஆளுநரின் கடிதம் முதலமைச்சருக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.


மேலும், தன்னை நிர்பந்திக்க, இதுவரை யாரும் பிறக்கவில்லை எனவும் சபாநாயகர் காட்டமாக தெரிவித்தார்.

என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது, நான் யாருக்கும் அஞ்ச தேவையில்லை, யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது. எனது பதவிக்கும் நான் எடுக்கும் முடிவுகளுக்கும் தேவையான துணிச்சலை எனது பெற்றோர் அளித்துள்ளனர்.

நான் நம்பும் மக்கள் எனக்கு அளித்துள்ளனர், அவையில் ஒருதலை பட்சமாக நடந்துகொள்ளும் தேவை எனக்கு இல்லை, நான் இந்த அவையில் உட்கார்ந்து கொள்ள மட்டுமே வரவில்லை. நான் எடுக்கும் முடிவு, அளிக்கும் தீர்ப்பு வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்றும் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் தெரிவித்தார்.

Loading...

இதனைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அவசரப்பட வேண்டாம் என பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக்கொண்டார். பாஜகவினர் ஜனநாயகத்தை அழிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே மாலை ஆறு மணிக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என மீண்டும் ஆளுநர் வஜுபாய் வாலா, குமாரசாமிக்கு கெடு விதித்து கடிதம் அனுப்பினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவையில் பேசிய குமாரசாமி, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள இரண்டாவது காதல் கடிதம் தன்னை மிகவும் கவலையடைய செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் எடியூரப்பாவின் உதவியாளரான சந்தோஷ், சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உடன் விமானத்தில் பயணிக்கும் படத்தை வெளியிட்ட அவர், கடந்த பத்து நாட்களாகவே எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்கி வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை சபாநாயகரிடமே விட்டுவிடுவதாக கூறிய குமாரசாமி, ஆளுநரின் கடிதங்களில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஆளுநர் விதித்த 2 கெடுவும் முடிவடைந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலே அவை ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நீண்டுக்கொண்டே சென்றதால், பேரவையை சபாநாயகர் ரமேஷ் குமார் திங்கள் கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார்.

இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பது போல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

Also see...

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...