ஹோம் /நியூஸ் /இந்தியா /

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் - குமாரசாமி ராஜினாமா செய்வார் என்று தகவல்

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் - குமாரசாமி ராஜினாமா செய்வார் என்று தகவல்

குதிரை பேரத்தை நிறுத்துமாறு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

குதிரை பேரத்தை நிறுத்துமாறு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

கர்நாடகாவில் சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி 2 கிலோமீட்டர் தொலைவுக்கு இன்று காலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த 14 எம்எல்ஏ-க்கள், ராஜினாமா செய்துள்ளனர். சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 2 பேர், அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால், அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மும்பையில் தங்கியுள்ளனர்.

மும்பையில் அவர்களை சந்தித்து சமாதானப்படுத்த முயன்ற அமைச்சர் சிவக்குமார் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால், தர்ணாவில் ஈடுபட்ட சிவக்குமார் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பெங்களூருவில் சட்டப்பேரவை வளாகத்தில் எடியூரப்பா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள், ஆளுநரை சந்தித்துப் பேசினர். அப்போது, தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அமைச்சர் சிவகுமார்

இதனிடையே, பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், சுதாகர், நாகராஜ் ஆகிய மேலும் 2 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதற்காக சபாநாயகர் அறைக்கு வந்த இருவரையும், அமைச்சர் பிரயங்க் கார்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கினர்.

மேலும், பெங்களூரு திரும்பியுள்ள அமைச்சர் சிவக்குமார், தன்னை கட்டாயப்படுத்தி மும்பையிலிருந்து வெளியேற்றியது வெட்கப்படக் கூடிய செயல் என்று வேதனை தெரிவித்தார்.

குமாரசாமி

பாஜகவினர் ரவுடிகளைப் போல செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டினார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர், நாளை தொடங்க உள்ளதையொட்டி, மாநில அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை குமாரசாமி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். இதில், முதலமைச்சர் பதவியிலிருந்து குமாரசாமி விலகுவது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி, மாநில அமைச்சரவைக் கூட்டத் தொடர்ந்து, ஆளுநரை சந்திக்கும் குமாரசாமி, பதவிவிலகல் கடிதத்தை அளிப்பதுடன், சட்டப்பேரவையை கலைக்குமாறு கோரிக்கை விடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி 2 கிலோமீட்டர் தொலைவுக்கு இன்று காலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்றுக் கொள்ளுமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்துள்ள மனு, இன்று விசாரணைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see... அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய சென்ற அமைச்சர் சிவக்குமார்


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: HD Kumaraswamy, Karnataka