தப்புவாரா குமாரசாமி...? கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.

Web Desk | news18
Updated: July 18, 2019, 7:30 AM IST
தப்புவாரா குமாரசாமி...? கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
கர்நாடக எம்எல்ஏக்கள் (கோப்புப் படம்)
Web Desk | news18
Updated: July 18, 2019, 7:30 AM IST
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார். இதையொட்டி, உறுப்பினர்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாமல் இருப்பதும் எம்எல்ஏ-க்களின் விருப்பம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.


இந்நிலையில், மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார். காலை 11 மணிக்கு விவாதம் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் முதலமைச்சர் குமாரசாமியும், துணை முதலமைச்சர் பரமேஷ்வராவும் நேற்று ஆலோசனை நடத்தினர். நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 3 பேருக்கும் குமாரசாமி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாவிட்டாலோ, அரசுக்கு எதிராக வாக்களித்தாலோ கட்சிதாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Loading...

இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் மாநில காங்கிரஸ் தலைவர் மனு அளித்துள்ளார். இந்த சூழலில், ராஜினாமாவை வாபஸ் பெற உள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமலிங்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.

225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 117 பேர் உள்ளனர். 16 பேரின் ராஜினாமா ஏற்றுக் கொண்டாலோ, அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாவிட்டாலோ, காங்கிரஸ் கூட்டணியின் பலம் 101-ஆகக் குறையும். பாஜக-வுக்கு 107 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

இதனால், குமாரசாமி அரசு கவிழும் அபாயம் உள்ளது. எனவே, கடந்த ஆண்டில் நம்பிக்கை வாக்கு கோராமலேயே எடியூரப்பா ராஜினாமா செய்ததைப் போல, குமாரசாமி ராஜினாமா செய்வாரா அல்லது நம்பிக்கை வாக்கு கோருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க... நான் அரசியலைப் பற்றி யோசிப்பதே விதிமுறைக்கு எதிரானது: சகாயம் ஐஏஎஸ்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...