கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா! - மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என புகார்!

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமிக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி

  • Last Updated :
  • Share this:
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய பெரிய மாநிலங்கள் பலவற்றிலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

நாட்டில் கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்துள்ள மாநிலங்களுள் ஒன்றாக கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பாவிற்கு 2வது முறையாக நேற்று மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமிக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே குமாரசாமிக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்கவில்லை என்றும் இதற்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடம் சென்று சிபாரிசு பெற்ற பின்னரே வேறு ஒரு மருத்துவமனையில் படுக்கைக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

கொரோனாவால் சமீபத்தில் பாதிப்புக்குள்ளான அரசியல் பிரபலங்கள்!


கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குமாரசாமியை முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கூட்டிச் சென்றதாகவும், அங்கு படுக்கை எதுவும் காலி இல்லை என தெரிவித்துவிடவே, அங்கிருந்தபடியே மாநில சுகாதாரத்துறை அமைச்சரான கே.சுதாகரை தொடர்பு கொண்டு பின்னர் அவரின் சிபாரிசின் பேரில் வேறு ஒருதனியார் மருத்துவமனையில் குமாரசாமி அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், “மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்க வேண்டும் என்றால் சிபாரிசு தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நம்மிடம் எதுவுமே கிடையாது. தற்போது தினசரி 10,000 என்ற அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த எண்ணிக்கையானது 15,000 முதல் 20,000 ஆக உயரக்கூடும் என கணித்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய மாநில அரசு என்ன செய்துள்ளது? அவர்கள் பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் கர்நாடகாவில் தேர்தல் நடத்துவது குறித்து கர்நாடக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,579 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 52 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் பாசிட்டிவிட்டி ரேட் 8.24% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: