முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவிலும் புதிய ராமர் கோயில் கட்டப்படும்.. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதி

கர்நாடகாவிலும் புதிய ராமர் கோயில் கட்டப்படும்.. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதி

கர்நாடக முதலமைச்சர் பொம்மை

கர்நாடக முதலமைச்சர் பொம்மை

கர்நாடக மாநிலம் ராமநகராவில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்படும் என்று பட்ஜெட் உரையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை  2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 3 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என அறிவித்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக புதிதாக பேருந்து திட்டம் ஒன்று அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 30 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினத்தை சேர்ந்த 10 ஆயிரம் இளைஞர்களுக்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் பணி வாய்ப்பு பெற இலவசமாக பயிற்சியளிக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். விவசாயிகளுக்கான வட்டியில்லா குறுகியகால கடன் வரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மாநிலத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களின் வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதாகக் கூறிய முதலமைச்சர் பொம்மை, ராமநகராவில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.

முன்னதாக ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூவுடன் பேரவைக்கு வருகை தந்தனர். கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. எனவே, தேர்தலுக்கு முன்பாக பசவராச் பொம்மை தலைமையிலான தற்போதைய அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Karnataka