கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் புதிய பிரச்னை உருவானது. அங்குள்ள அரசு PUC கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் தலையில் முக்காடாக அணியும் ஹிஜாபை வழக்கம்போல் அணிந்து வந்தபோது வகுப்பில் அமரக் கூடாது என நிர்வாகம் கூறியது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர்களில் ஒருசிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இன்று மாண்டியாவில் உள்ள PES கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் பர்தா அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவி துண்டு அணிந்திருந்த மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பர்தா அணிந்து வந்த பெண்ணை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட மாணவர்கள் - வைரலாகும் வீடியோ
இந்நிலையில், கல்வி நிலையங்களில் நிலவும் பதற்றமான சூழலை தணிக்கும் விதமாக கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ”கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். மாணவர்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களிடையே மோதல்கள் ஏதும் ஏற்படாதவாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.