ஹோம் /நியூஸ் /இந்தியா /

கர்நாடக முதலமைச்சர் இன்று மதியத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு!

கர்நாடக முதலமைச்சர் இன்று மதியத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு!

கர்நாடகா சட்டப்பேரவை

கர்நாடகா சட்டப்பேரவை

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி, சட்டப்பேரவையிலேயே பாஜக எம்எல்ஏ-க்கள் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

கர்நாடகாவில் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி, சட்டப்பேரவைக்குள்ளேயே பாஜக எம்எல்ஏ-க்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று மதியம் 1-30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை நேற்று காலை கொண்டுவந்தார். இதன் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் பேசினர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, மதியம் 3 மணிக்கு அவை கூடியபோது, காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் கடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். இதனால் ஏற்பட்ட அமளியால் அவை சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், மாநில ஆளுநர் வாஜுபாய் வாலாவை பாஜக பிரதிநிதிகள் சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினமே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ-க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். இந்நிலையில், முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள ஆளுநர், இன்று மதியம் 1-30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி, சட்டப்பேரவையிலேயே பாஜக எம்எல்ஏ-க்கள் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவைக்குள்ளேயே தலையணை, போர்வை ஆகியவற்றை கொண்டுவந்த எம்எல்ஏ-க்கள் எதிர்க்கட்சியினருக்கான அறையில் இரவு உணவு சாப்பிட்டனர். மேலும், சட்டப்பேரவைக்குள்ளேயே படுத்து தூங்கினர்.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்களை பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் சவதி அழைத்துச் சென்றுள்ளதாக அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

மேலும், ஸ்ரீமந்த் பாட்டீலை பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் சவதி கடத்திச் சென்றதாக காவல் துறையிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை சென்றிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக, மும்பைக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஸ்ரீமந்த் பாட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது, ஆளுநரின் உத்தரவுப்படி, சபாநாயகர் செயல்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தும் வகையில், சட்டப்பேரவையில் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட உள்ளோம். என்னைப் பொறுத்தவரை, மாநிலத்தில் ஆளும் உரிமையை குமாரசாமி தலைமையிலான அரசு இழந்துள்ளது என்றார்.

எம்எல்ஏ-க்களை லக்ஷ்மன் சவதி அழைத்துச் சென்றுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. குடும்பத்தினரும், நண்பர்களும் எங்களுடன் பேசினர். அவர்கள் ஒன்றாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் பாஜக-வினரே செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்ததை செய்ய உள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க... காங்கிரஸ் எம்.எ.ஏ-க்கள் கடத்தப்பட்டதாக கூறி ஆளும் பாஜக சட்டப்பேரவையில் அமளி!


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.</

Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, Congress, HD Kumaraswamy, Karnataka