ஹோம் /நியூஸ் /இந்தியா /

எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை உயர்த்தி கர்நாடகா அரசு அவசர சட்டம் - அமைச்சரவை ஒப்புதல்!

எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டை உயர்த்தி கர்நாடகா அரசு அவசர சட்டம் - அமைச்சரவை ஒப்புதல்!

கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடை உயர்த்தும் அவசர சட்டத்திற்கு கர்நாடகா அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பட்டியில் சாதிகள், பட்டியல் பழங்குடி (SC/ST) சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு அளவை உயர்த்த கோரி நீண்ட கால கோரிக்கை உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு இதற்கான முன்னெடுப்புகளை கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகிறது.

  இந்நிலையில், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை நேற்று கூடிய நிலையில் இட ஒதுக்கீடு உயர்வுக்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதை ஆளுநருக்கு அனுப்பு உள்ளனர். இதை அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜேசி மதுசூதனசுவாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  இதையடுத்து எஸ்சி சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு 15இல் இருந்து 17 சதவீதமாகவும், எஸ்டி சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு 3இல் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மூலம் கர்நாடகாவில் இட ஒதுக்கீடு அளவு 56 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னாள் நீதிபதி இந்திரா ஷாவ்னியின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டி கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே, இந்த இட ஒதுக்கீடு உயர்வு சட்டத்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 9ஆவது அட்டவணையின் கீழ் கொண்டுவந்து சட்ட பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.

  இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் கார்கேவுக்கு காத்திருக்கும் சவால்கள்...!

  'இந்த வரலாற்று முடிவு மூலம் எஸ்சி,எஸ்டி சமூக மக்கள் வாழ்வில் ஒளி பெற்று,கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உரிய வாய்ப்புகளை பெறுவார்கள்' என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர பல்வேறு யுக்திகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே இரு நாள்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். முன்னணி தலித் முகமாக இருக்கும் கார்கே காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச பொறுப்பை பெற்ற அடுத்த நாளே இந்த இட ஒதுக்கீடு உயர்வு அவசர சட்டத்தை கர்நாடகா பாஜக அரசு கொண்டுவந்துள்ளது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: BJP, Karnataka, Reservation, Scheduled caste