குடும்பம் நடத்த பணம் இல்லை....சிறுநீரகத்தை விற்க துணிந்த கர்நாடகா போக்குவரத்து ஊழியர்

பணம்

குடும்பம் நடத்த பணம் இல்லாததால், கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்க துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாது அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை. ஏற்கனவே இருந்த சம்பள பாக்கி படிப்படியாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் கர்நாடகா அரசு போக்குவரத்து ஊழியர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் கொப்பலில் வசிக்கும் 38 வயதான ஹனுமந்த் காலேகர் என்ற நபர் தனது அன்றாட செலவுகளை சமாளிக்க தனது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்துள்ளார். வடகிழக்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் (NEKRTC) உள்ள கன்காவதி டிப்போவில் நடத்துனராக பணிபுரியும் ஹனுமந்த், ”நான் ஒரு போக்குவரத்து ஊழியர். எனது ரேஷன் மற்றும் வீட்டு வாடகைக்கு செலுத்த என்னிடம் பணம் இல்லை. எனவே, எனது சிறுநீரகத்தை விற்பனை செய்ய தயாராக உள்ளேன். தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்” என தனது செல்போன் நம்பரை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னர் ஹேமந்த் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் வேலை செய்துள்ளார். 

தன் மனைவி, தாய் மற்றும் 3 குழந்தைகளுடன் வசிக்கும் ஹேமந்த்திற்கு, ரூ. 16,000 சம்பளம் ஆனால் கடந்த 2 மாதங்களாக ரூ. 3000 அல்லது ரூ. 3,500 மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்து உள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி அவர் குடும்பத்தை நடத்தி வந்து உள்ளார். தற்போது போக்குவரத்து துறை இயல்பு நிலைக்கு திரும்பினாலும், அவரது நிதி நிலைமையில் எவ்வித மாற்றமும் ஏற்படாததால் வேறுவழியின்றி தனது சிறுநீரகத்தை விற்று குடும்ப வறுமையை போக்க முடிவு செய்துள்ளார். 

வீட்டு வாடகை செலுத்த வேண்டும், மளிகை சாமான்களை வாங்க வேண்டும், தனது குழந்தைகளின் கல்வியைக் கவனித்துக் கொள்ள வேண்டும், பெற்றோரின் மருத்துவ கட்டணங்களையும் கவனித்து கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் தான் இத்தகைய முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் ரேசன் பொருட்களை கூட வாங்க முடியாமல் தவிக்கிறோம் என ஒரு போக்குவரத்து ஊழியர் கூறிய சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான இணையவாசிகள் அவரது முகநூல் பதிவை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: