கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த 2 மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகள் இருவரும் தேர்வு எழுதாமல் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறினர்.
கர்நாடகாவில் 12-ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. இதை எழுதுவதற்காக 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு மாநிலம் முழுவதும் ஆயிரத்து 76 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை தேர்வு அறைக்குள் அனுமதிக்க கூடாது என்று கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் உத்தரவிட்டிருந்தார். இதையொட்டி, தங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று முஸ்லிம் மாணவிகள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தன. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று தேர்வுகள் தொடங்கின.
இதையும் படிங்க - மின் இணைப்பை துண்டித்த இன்ஜினியர் மீது சரமாரி தாக்குதல்... தெலங்கானாவில் பரபரப்பு
உடுப்பி மாவட்டம் வித்யோதயா பள்ளியில் இன்று தேர்வு நடைபெற்ற போது ஆலியா அசாதி மற்றும் ரேஷம் ஆகியோர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய கண்காணிப்பாளர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். அவர்களுடன் சுமார் 45 நிமிடங்களில் மாணவிகள் பேசிய நிலையில், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மாணவிகளுக்கு அனுமுதி மறுத்தனர்.
அனுமதி மறுக்கப்பட்ட மாணவிகளில் ஆலியா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க - திருமணமான ஆணுடன் இளம்பெண் ஓட்டம்... மீட்பு செலவில் பாதியை காவல்துறைக்கு ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘எங்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும். அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத எங்களை அனுமதிக்க வேண்டும். தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளுங்கள். நாங்கள் இந்த நாட்டின் எதிர்காலம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு மாணவிகள் செல்ல மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மாணவிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.