ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விமானப்போக்குவரத்துத்துறை: தந்தை வகித்த பதவி தற்போது மகனுக்கு!

ஜோதிராதித்ய சிந்தியா

ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையான மறைந்த மாதவராவ் சிந்தியா,, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். இவர் குவாலியர் மன்னர் குடும்ப வாரிசும் ஆவார்.

  • Share this:
மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விமான போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருடைய தந்தை மாதவராவ் சிந்தியாவும் காங்கிரஸ் ஆட்சியின் போது இதே துறையின் அமைச்சராக இருந்தவர்.

பிரதமர் மோடி தலைமையில் 2019-ம் ஆண்டு மே மாதம் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றது. அதன் பின்னர் மத்திய அமைச்சரவை பெரிதாக மாற்றப்படவில்லை. இந்நிலையில், மத்திய அமைச்சரவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே ஏற்பட்டிருந்தது. அதன்படி, மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 12 பேர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 43 பேர் மத்திய அமைச்சராக பதவியேற்றனர். தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில் முக்கிய துறைகளுள் ஒன்றான விமான போக்குவரத்து துறை, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அத்துறையின் அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரி, ஊரக மேம்பாடு மற்றும் பெட்ரோலியத்துறையின் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

Also Read:  தகவல், ஒலிபரப்பு மற்றும் மீன், கால்நடை துறைக்கு இணையமைச்சரானார் எல்.முருகன்!

ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையான மறைந்த மாதவராவ் சிந்தியா,, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். இவர் குவாலியர் மன்னர் குடும்ப வாரிசும் ஆவார். முந்தைய காங்கிரஸ் அரசில் மாதவராவ் சிந்தியா மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் விமான விபத்து ஒன்றில் சிக்கி மரணம் அடைந்தார்.

தற்போது தந்தை பார்த்து வந்த விமான போக்குவரத்துத்துறை அமைச்சராகியிருக்கிறார் ஜோதிராதித்ய சிந்தியா.

Also Read:  மத்திய அமைச்சரவை மாற்றம்- யாருக்கு என்ன பதவி: முழு தகவல்!

காங்கிரஸ் கட்சியின் மத்திய பிரதேச முகமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, அக்கட்சியினரிடையே ஏற்பட்ட மனக்கசப்பால் காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2020 மார்ச்சில் பாஜகவில் இணைந்தார். இவரும் முன்னதாக மன்மோகன் ஆட்சிக் காலத்தில் மத்திய மின்சாரத் துறையின் இணை அமைச்சராக (தனி பொறுப்பு) இருந்துள்ளார்.

மத்திய விமானப் போக்குவரத்துத்துறையின் அமைச்சரான பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, “இந்த வாய்ப்பை எனக்கு தந்த மூத்த தலைவர்களுக்கு நன்றி. என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிப்பேன் என்றார்.

1971ம் ஆண்டு பிறந்தவரான சிந்தியா, ஹார்வர்ட் மற்றும் ஸ்டேன்ஃபர்ட் கல்விநிறுவனங்களில் படித்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது கொரோனா பெருந்தொற்றால் விமான போக்குவரத்துத்துறை கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்த இக்கட்டான தருணத்தில் அத்துறையின் அமைச்சராகியிருக்கும் சிந்தியா மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: