சட்டப் பேரவை உறுப்பினர் முதல் பா.ஜ.க தலைவர் வரை! ஜே.பி.நட்டாவின் அரசியல் பயணம்

சட்டப் பேரவை உறுப்பினர் முதல் பா.ஜ.க தலைவர் வரை! ஜே.பி.நட்டாவின் அரசியல் பயணம்
ஜே.பி.நட்டா
  • Share this:
பா.ஜ.கவின் செயல் தலைவரான ஜே.பி. நட்டா வரும் 20ஆம் தேதி அக்கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட உள்ளார்.

பா.ஜ.க தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதல்முறையாக பதவியேற்ற போது உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜுலை மாதம் பா.ஜ.கவின் தலைவராக அமித் ஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு 2-வது முறையாக பதவியேற்ற போது, அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சரானார். இதைத்தொடர்ந்து பா.ஜ.கவின் செயல்தலைவராக ஜே.பி.நட்டா கடந்த ஜுன் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ.கவின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை அக்கட்சி தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பா.ஜ.கவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டாவின் பெயரை, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் முன்மொழிவார்கள் எனத் தெரிகிறது.


வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்தவுடன், ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வரும் 22-ம் தேதி கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக ஜே.பி.நட்டா பதவியேற்றுக் கொள்ள உள்ளதாகவும், இதனை பிரமாண்ட விழாவாக நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெகத் பிரகாஷ் நட்டா எனப்படும் ஜே.பி. நட்டா, 1960ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி பீகார் மாநிலத்தில் பிறந்தார். பாட்னாவில் செயின்ட் சேவியர் பள்ளியில் படித்த நட்டா, பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றதுடன், இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றார். மிகச்சிறந்த நீச்சல் வீரராகவும் நட்டா திகழ்ந்தார். 1993, 1998 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போது இமாச்சல் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

2008ஆம் ஆண்டு மாநில வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2010ஆம் ஆண்டு பா.ஜ.கவின் தேசியச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டா, அக்கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் முக்கியமானவராக கருதப்படுகிறார். 2014-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டா, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சரானார்.Also see:

First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்