பிஹாரில் சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு நெருக்கடி: தலைவர்கள், தொண்டர்கள் என 200 பேர் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தனர்!

ராம்விலாஸ் பஸ்வான்

சிறந்த ராஜதந்திரியான ராம் விலாஸ் பஸ்வான், நிதிஷ் குமாருடன் மனஸ்தாபத்தில் இருந்து வந்தாலும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியாறாமல் தான் அரசியல் செய்து வந்தார். ஆனால் அவரின் மகன் சிராக் பஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

  • Share this:
சிராக் பஸ்வானின் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 200 பேர் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர்.

அதிருப்தியில் இருந்து வந்த லோக் ஜன சக்தி கட்சித் தலைவர்கள், ஐக்கிய ஜனதா தளம் அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான ஆர்.சி.பி சிங்கின் முன்னிலையில் நேற்று இணைந்தனர்.

இந்த இணைப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னர் தான் அக்கட்சியின் மூத்த தலைவரும் 2020 சட்டமன்ற தேர்தலில் சாசரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான ரமேஷ்வார் சவுராசியா அக்கட்சியில் இருந்து விலகினார். முன்னாள் எம்.எல்.ஏவான ரமேஷ்வார் சவுராசியா பாஜகவில் இருந்து லோக் ஜன சக்திக்கு வந்தவர். பாஜக வேட்பாளராக நோகா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை அவர் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவருக்கு பாஜக சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவில் இருந்து விலக நேர்ந்தது.

இந்நிலையில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ஆர்.சி.பி சிங் வழங்கினார்.

தலைவர்கள், தொண்டர்கள் என 200 பேர் கட்சியிலிருந்து விலகியிருப்பது அக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

மத்திய அமைச்சராக இருந்த போது காலமான ராம் விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான், கடந்த ஆண்டு நிதிஷ் குமார் கட்சிக்கு இடையிலான பிரச்னை காரணமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். இதன் பின்னர் பீகார் சட்டமன்ற தேர்தலில் தனித்து 143 இடங்களில் போட்டியிட்டார். ஆனால் அதில் ஒரு இடத்தில் கூட அவரின் கட்சி வெற்றி பெற முடியாமல் போனது பெருத்த பின்னடைவாக அமைந்தது.

சிறந்த ராஜதந்திரியான ராம் விலாஸ் பஸ்வான், நிதிஷ் குமாருடன் மனஸ்தாபத்தில் இருந்து வந்தாலும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியாறாமல் தான் அரசியல் செய்து வந்தார். ஆனால் அவரின் மகன் சிராக் பஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேறினார். சட்டமன்ற தேர்தலில் கிடைத்த தோல்வி அரசியலில் அவருக்கு புதிய பாடத்தையும் கற்றுத்தந்தது.

இந்த நிலையில் பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் சிராக் பஸ்வான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா அல்லது தனித்து அரசியல் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.
Published by:Arun
First published: