• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காஷ்மீரில் தத்தளிக்கும் காங்கிரஸ்.. 20 தலைவர்கள் திடீர் ராஜினாமா - தலைமைக்கு எதிராக போர்க்கொடி

காஷ்மீரில் தத்தளிக்கும் காங்கிரஸ்.. 20 தலைவர்கள் திடீர் ராஜினாமா - தலைமைக்கு எதிராக போர்க்கொடி

Congress

Congress

ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்கள், குலாம் நபி ஆசாத் கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடையில் ஒன்றாக கலந்துகொண்டனர்.

  • Share this:
காஷ்மீரில் மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றம் செய்ய வலியுறுத்தி முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாநில துணை தலைவர் உட்பட 20 காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டு, அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் மாநில தலைவருக்கு எதிர்த்து தெரிவித்து பெரும்பாலான தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது அக்கட்சி தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருங்கியவர்கள் என தெரிகிறது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வரும் குலாம் அகமது மிர்-க்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாநில துணைத் தலைவர் உட்பட 20 முக்கிய தலைவர்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் அவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டுள்ளவரும், ஜி23 தலைவர்களுள் முக்கியமானவருமான குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Also read:  கோவிட் பாசிட்டிவ் ஆன காங் எம்.எல்.ஏ.. மாஸ்க் அணியாமல் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவலம்

முன்னாள் அமைச்சர்கள் ஜி.எம்.சரூரி, விகார் ரசூல், டாக்டர். மனோகர் லால் சர்மா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஜுகல் கிஷோர் சர்மா, குலாம் நபி மொங்கா, நரேஷ் குப்தா, முகமது அமின் பாத், சுபாஷ் குப்தா, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அன்வர் பாத், குல்காம் மாவட்டத் தலைவர் சகீத் ஹசன் ஜன், முன்னாள் முதல்வரின் ஆலோசகர் மன்சூர் அகமது கனாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்திருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also read:   மாவட்ட நீதிபதி மீது போலீசார் திடீர் தாக்குதல் - வழக்கு விசாரணையில் நடுவே பரபரப்பு சம்பவம்..

மேலும் ராஜினாமா செய்த தலைவர்கள், குலாம் நபி ஆசாத் கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடையில் ஒன்றாக கலந்துகொண்டனர். அவர்கள் கூறுகையில், தற்போதைய மாநில தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான், ஆனால் அவர் கடந்த 7 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். நாங்கள் குலாம் நபி ஆசாத்தை தலைவராக ஏற்கிறோம். அவர் காஷ்மீரில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு காரணமாக இருந்து பல தியாகங்களை செய்திருக்கிறார். என்றனர்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்து குலாம் நபி ஆசாத் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழுவில் குலாம் நபியின் பெயர் இடம்பெறாதது அவரை ஒடுக்கும் முயற்சி என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: