டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கங்களுக்கு இடையே மோதல் சம்பவங்கள் சமீப காலமாகவே அதிகம் காணப்பட்டு வருகிறது. இடதுசாரி மாணவர் அமைப்பிற்கும் வலதுசாரி ஏபிவிபி அமைப்பிற்கும் இடையேயான கருத்து மோதல்கள் போராட்டங்களாகவும் அதைத் தொடர்ந்து வன்முறை சம்பவங்களாகவும் உருவெடுத்தன.
மாணவர்களுக்கு இடையேயான மோதல் பல்கலைகழக வாளாகத்தையே பதற்றமான சூழலில் வைத்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜேஎன்யூ பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் புதிய உத்தரவை ஒன்றை பிறப்பித்துள்ளது. ஜேஎன்யூ மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிமுறைகள் என்று 10 பக்க உத்தரவுகளை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, பல்கலைக்கழகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் அல்லது குழுக்களுக்கு ரூ.20,000இல் இருந்து ரூ.30,000 அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல, வன்முறை சம்பவங்களுக்கு வித்திடும் மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் என கறாரான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல, ஹாஸ்டல் அறைகளில் வசை, அவமானத்தற்குரிய சொற்களை எழுதி வரைந்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் குற்றமாகும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஒழுங்கு விதிமுறை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியில் இருந்தே அமலுக்கு வந்ததாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி டாக்குமென்டரி ஒலிபரப்புவது தொடர்பாக மாணவர்கள் அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அத்துடன் சத்திரபதி சிவாஜி பிறந்தநாள் கொண்டாடம் தொடர்பாக ஏபிவிபி அமைப்புக்கும் இடதுசாரி அமைப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் காயமடைந்தனர். இது பெரும் விமர்சனத்தை எழுப்பிய நிலையில், அதைத் தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கையை ஜேஎன்யூ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.