'இந்தியாவுடன் இருப்பதையே காஷ்மீர் இளைஞர்கள் விரும்புகின்றனர்' : News 18-க்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிரத்யேக பேட்டி
'இந்தியாவுடன் இருப்பதையே காஷ்மீர் இளைஞர்கள் விரும்புகின்றனர்' : News 18-க்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிரத்யேக பேட்டி
மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரா சிங்
பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து விவரித்துள்ளார் அமைச்சர்.
இந்தியாவுடன் இருப்பதையே காஷ்மீர் இளைஞர்கள் விரும்புவதாகவும், அங்கே தீவிரவாதம் விரைவில் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய இணையமைச்சர் தனது பேட்டியில், 'எளிய மக்கள் மீது தாக்குதல் நடத்தி தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ள தீவிரவாதிகள் முற்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.' என்றும் அவர் கூறியுள்ளார். ஜிதேந்திர சிங் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு-
கேள்வி: 'பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்' என்று அமித்ஷா கூறியுள்ளார். அது பற்றிய உங்கள் கருத்து?
பதில் : ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அமித்ஷா கூறியது முற்றிலும் உண்மை. இங்குள்ள இளைஞர்கள் உண்மையிலேயே இந்தியாவுடன் இருப்பதையே விரும்புகின்றனர். அவர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்கள். சமீபத்தில் வெளியான போட்டித் தேர்வு முடிவுகளிலிருந்து அவர்களின் திறமையை நாம் உணர முடியும். நீட் மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் சிறப்பான திறமையை ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடையே அது அதிகளவு ஏற்பட்டிருக்கிறது.
கேள்வி: அப்படியானால் பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று கருதலாமா?
பதில்: இதுபற்றி மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீரின் கள நிலவரத்தை அறிந்து அரசு நல்ல முடிவை எடுக்கும். இது பற்றி மேலும் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.
கேள்வி : சமீபகாலமாக குடிமக்கள் மீது நடந்திருக்கும் தீவிரவாத தாக்குதல் குறித்து மத்திய அரசு அக்கறை கொள்கிறதா?
பதில் : அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் தங்கள் இருப்பை நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர். எனவே தான் இதுபோன்ற தாக்குதல்கள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்திருக்கின்றன. மோதல்களின் போது பொதுமக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் குறைந்திருக்கின்றன. தீவிரவாத தலைவர்கள் குறிவைத்து என்கவுண்டர் செய்யப்படுவதால் அவர்கள் கதாநாயகனாக மாறுவது தவிர்க்கப்படுகிறது. இதுவும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்ததற்கு ஒரு காரணம்.
கேள்வி: ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் மத்திய மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்களா?
பதில் : இங்குள்ள இளைஞர்கள் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல விரும்புகின்றனர். இந்தியாவுடன் இணைந்து இருப்பதுதான் தங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பை அவர்கள் தவறவிட விரும்பவில்லை. அவர்களின் முழு ஆதரவு இந்தியாவுக்கு இருக்கிறது.
கேள்வி : ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்திய பின்னர் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். அதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்தன. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில்: அமித் ஷா தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். அவர் நாடாளுமன்றத்தில் கூறியதைத் தான் அதற்கு வெளியேயும் கூறிவருகிறார். மாநில அந்தஸ்து ஏற்படுத்துவதும், எல்லைகளை வகுப்பது என்பதும் அரசியலமைப்பு சட்ட ரீதியிலான ஒரு நடவடிக்கையாகும். எனவே இந்த விஷயத்தில் பெரிய சிக்கல்கள் ஏற்படும் என்று நான் கருதவில்லை.
கேள்வி: டெல்லி - ஜம்மு காஷ்மீருக்கும் இடையிலான அரசியல் உறவு இடைவெளியை குறைக்க வேண்டும் என்று மோடி கூறியிருந்தார். அந்த விஷயத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளாரா?
பதில்: 2014-இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அங்கு வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் ஏராளமான உதவிகளை மத்திய அரசு செய்தது. மோடி தனது முதல் தீபாவளியை ஜம்மு-காஷ்மீரில் தான் கொண்டாடினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் உடனிருந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்தார். இந்த தீபாவளியையும் ஜம்மு-காஷ்மீரில் இராணுவத்தினருடன் கொண்டாடினார். பிரதமர் மோடி தான் தெரிவித்த கருத்தில், அவர் விரும்பிய விஷயத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் கருதுகிறேன்.
Published by:Abdul Mushtak
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.