புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது...

புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது...

புதுச்சேரியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பலை தேடிச் சென்ற போலீசிடம், போதைப் பொருளை புழக்கத்தில் விட்ட கும்பலும் சிக்கியுள்ளது. இதில் கஞ்சாவுக்காக கேட்டமைன் மயக்க மருந்தை விற்ற ஜிப்மர் மருத்துவர் ஒருவரும் சிக்கியுள்ளார்.

புதுச்சேரியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பலை தேடிச் சென்ற போலீசிடம், போதைப் பொருளை புழக்கத்தில் விட்ட கும்பலும் சிக்கியுள்ளது. இதில் கஞ்சாவுக்காக கேட்டமைன் மயக்க மருந்தை விற்ற ஜிப்மர் மருத்துவர் ஒருவரும் சிக்கியுள்ளார்.

  • Share this:
    அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு மயக்கம் வருவதற்காக பயன்படுத்தப்படும் கேட்டமைன் மருந்தை, கஞ்சாவுக்கு பண்டமாற்று செய்து வாங்கிய கும்பல், அதை அதிக விலைக்கு விற்றுள்ளது. என்ன நடந்தது புதுச்சேரியில்....,

    புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி சாலையில் ஏராளமான தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு பாலியல் தொழில் நடப்பது வாடிக்கை என்பதால், அங்கு போலீசாரும் திடீர் சோதனை செய்வது வழக்கம். அதேபோல், கடந்த சனிக்கிழமையன்று தங்கும் விடுதி ஒன்றில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, விடுதி மேலாளர் ஒருவருடன் 5 பேரை கைது செய்த போலீசார், மற்ற அறைகளிலும் சோதனை செய்தனர்.

    மற்றொரு அறையில், புதுச்சேரியைச் சேர்ந்த தேவநாதன் என்ற இளைஞரும், பெங்களூரைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் ஒருவரும் போதையில் மயங்கிக் கிடந்தனர். கஞ்சா போதையில் இருப்பதாக முதலில் கருதிய போலீசார், இருவரையும் மருத்துவ சோதனைக்கு அனுப்பினர். அப்போதுதான், கேட்டமைன் மருந்தை இருவரும் போதைக்காக பயன்படுத்தியதை அறிந்து அதிர்ந்து போயினர் போலீசார்.

    இதையடுத்து. பெண் மென்பொறியாளர் மற்றும் தேவநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான், ஆரோவில்லில் ஆசிரியராக பணியாற்றும் ரஷியாவைச் சேர்ந்த இவான் என்பவரிடம் இருந்து வாங்கியது தெரியவந்தது. இவானை கைது செய்து விசாரித்தபோது, அவரோ, லாஸ்பேட்டையைச் சேர்ந்த பெலிக்ஸ் என்பவரை கைகாட்டியுள்ளார்.

    இதையடுத்து, ஃபெலிக்ஸ், அவரது கூட்டாளிகளான வில்லியனூரைச் சேர்ந்த பார்த்தசாரதி, மணிகண்டன் ஆகியோரையும் சுற்றிவளைத்து கைது செய்த போலீசார், மூன்று பேரிடமும் இருந்து ஒரு கிலோ கஞ்சாவையும், 2 போதை மருந்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு கேட்டமைன் மருந்து எவ்வாறு கிடைத்தது என விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியபோதுதான், ஜிப்மர் மருத்துவர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வருபவர் 29 வயதான துரையரசன். அறுவைச் சிகிச்சையின்போது எந்த நோயாளிக்கு, எவ்வளவு மயக்க மருந்து செலுத்த வேண்டும் என்பதை தெரிவிப்பதே இவரது பணி. மருத்துவராக இருந்தாலும், கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்டவர் துரையரசன்.



    கஞ்சாவுக்காக எதை வேண்டுமானாலும் துரையரசன் செய்யத் தயாராக இருப்பதை அறிந்து கொண்டது போதைப் பொருள் விற்பனைக் கும்பல். கேட்கும்போதெல்லாம் கஞ்சாவை கொடுத்த துரையரசனை தங்களது கைக்குள் வைத்துக் கொண்ட கும்பல், குறைந்த விலைக்கு கேட்டமைன் மயக்க மருந்தை வாங்கியுள்ளது. இந்த கேட்டமைன் மயக்க மருந்தை, கஞ்சா போதை போதாது என்பவர்களுக்கு கூடுதல் போதைக்காக விற்று வந்துள்ளது இந்த கும்பல்.

    மேலும் படிக்க...70 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் இணையத்தில் வெளியானது..

    இதையடுத்து, ஜிப்மர் மருத்துவர் துரையரசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 கேட்டமைன் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: