பக்தர்களின் பயன்பாட்டிற்காக, ‘திருமலை திருப்பதி தேவஸ்தானம்ஸ்’ என்ற மொபைல் செயலியை கோவில் நிர்வாகத்திற்கு நன்கொடையாக வழங்கியது ஜியோ நிறுவனம். மேலும் கோவிலுக்காக தானியங்கி பூந்தி தயாரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்த 50 கோடி ரூபாய் நன்கொடை வழங்கவும் முன்வந்துள்ளது ஜியோ.
பக்தர்களின் பயன்பாட்டிற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தேவஸ்தான நிர்வாகம் ‘கோவிந்தா’ என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டது. பல்வேறு காரணங்களுக்காக அந்த செயலியின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஜியோ நிறுவனம் தேவஸ்தானத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுமார் 20 கோடி ரூபாய் செலவில் ‘திருமலை திருப்பதி தேவஸ்தானம்ஸ்’ என்ற பெயரிலான மொபைல் செயலி ஒன்றை தயார் செய்து தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது.
அந்த செயலியை இன்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் திருப்பதி மலையில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டனர். இந்த ஆப் மூலம் பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள்,கட்டண சேவை டிக்கெட்டுகள், மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கான தரிசன அனுமதி, தங்கும் அறைகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை முன்பதிவு முறை மூலம் பெற்று கொள்ளலாம்.
இது தவிர பக்தி ரிங்டோன்கள், காலர் ஐடி, போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் சர்வதேச அளவில் இருக்கும் பக்தர்கள் இதன் மூலம் பெற்று பயனடையலாம் என்று அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி கூறினார். மேலும் ஜியோ நிறுவனத்தின் 50 கோடி ரூபாய் நிதி உதவியுடன் திருப்பதி மலையில் தானியங்கி பூந்தி தயாரிப்பு இயந்திரம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தகவலளித்துள்ளார்.
இது குறித்து திருப்பதி மலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, “தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் வழக்கமான முறையில் கோவிலுக்கு வெளியே தற்போது தயார் செய்யப்படும் பூந்தி கன்வேயர் பெல்ட் மூலம் கோவிலுக்கு உள்ளே அனுப்பப்படுகிறது. அங்கு பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பூந்தியை கைகளால் உருண்டை பிடித்து லட்டு தயார் செய்கின்றனர். அந்த லட்டுக்கள் மீண்டும் கன்வேயர் பெல்ட் மூலம் லட்டு விநியோக கவுண்டருக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பதி மலையில் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த பணியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மனித வளத்தை மட்டுமே பயன்படுத்தி பூந்தி தயாரிக்கும்போது காலதாமதம், பொருட்கள் வீணாவது ஆகியவை போன்ற தவிர்க்க இயலாத சம்பவங்களாக இருக்கின்றன. எனவே பூந்தி தயாரிப்பை முழுவதும் இயந்திர மயமாக்குவது பற்றி தேவஸ்தான நிர்வாகம் கடந்த ஓராண்டாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.
இதற்காக தேவஸ்தான அதிகாரிகள் பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று அங்கு இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யும் முறையை பரிசீலித்து வந்தனர். இந்த நிலையில் தானியங்கி பூந்தி தயாரிப்பு எந்திரத்தை பொருத்தி பயன்படுத்த ஐம்பது கோடி ரூபாய் நன்கொடை வழங்க ஜியோ நிறுவனம் முன் வந்துள்ளது. விரைவில் ஜியோ நிறுவனத்தின் நன்கொடை மூலம் தானியங்கி பூந்தி தயாரிப்பு இயந்திரம் திருப்பதி மலையில் பொருத்தப்படும். இதற்கான செயல்முறை சோதனை விரைவில் துவங்க உள்ளது” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jio, Reliance Jio, Tirumala Tirupati, Tirupati laddu, Tirupati temple