ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலையில், அந்தரத்தில் இரு ரோப்கார்கள் மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து காரணமாக இந்த ரோப்வே பாதையில் இயக்கம் தடைப்பட்டுள்ளது.
இதையடுத்து 12 ரோப்வே கேபின்களில் 48 பேர் அந்தரத்தில் சிக்கியுள்ளனர். இதில் இதுவரை 19 பேரை இந்திய விமானப்படை மீட்டுள்ளது. மீதமுள்ள நபர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை களமிறங்கியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை நேரத்தில் நடைபெற்றதாகவும், இது தொடர்பான தகவல் விமானப் படைக்கு நேற்று இரவு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விமானப் படை தற்போது Mi-17, Mi-17 V5 ரக விமானங்களை மீட்பு பணிக்காக களமிறக்கியுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ரோப்காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் எனவும், இது தொடர்பான உரிய விசாரணை விரைந்து நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
சம்பவயிடத்திற்கு ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் விரைந்து மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
விபத்து குறித்து மாநில நிர்வாகத்திடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளார்.
ரோப்காரில் பலர் 20 மணிநேரமாக சிக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கும் பணிகளை மீட்பு குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ரகுபர் தாஸ், "20 மணி நேரம் ஆகியும் மக்களை மீட்க முடியாமல் அரசு தவித்து வருகிறது. இது அரசின் திறனற்ற தன்மையை காட்டுகிறது. சம்பவம் நடத்து பல மணி நேரம் ஆன பின்னரும் அரசு தரப்பில் யாரும் அங்கு சென்று கூட பார்க்கவில்லை. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசு ஏற்க வேண்டும். இந்த விபத்திற்கு காரணமானவர்களை அரசு விரைந்து தண்டிக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏற்கனவே இதுபோன்ற ரோப்கார் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், ஜம்மு காஷ்மீரின் குல்மார்க், சத்தீஸ்கரின் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே ரோப் கார் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.