ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து நரேஷ் கோயல் பதவி விலகல்!

23,000 ஊழியர்களை கொண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது.

Web Desk | news18
Updated: March 26, 2019, 9:25 AM IST
ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து நரேஷ் கோயல் பதவி விலகல்!
ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் நரேஷ் கோயல் மும்பையில் நடந்த கூட்டத்தில் பேசியபோது
Web Desk | news18
Updated: March 26, 2019, 9:25 AM IST
தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து அதன் தலைவர் நரேஷ் கோயல் விலகினார். அவரது மனைவி அனிதா கோயல் மற்றும் எதியாட் ஏர்வேஸ் நிறுவன நாமினி உறுப்பினரும் தனது பொறுப்புகளிலிருந்து விலகினர்.

1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தியது. தனது பயணத்தை தொடங்கியபோதே சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் சேவைகளுக்கே சவால் விட்டது.

விமானப் போக்குவரத்தில் சீரான வளர்ச்சியை கண்டு, சர்வதேச விமான சேவை வழங்கும் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு தனது நிறுவனம் தொடங்கப்பட்டதன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஜெட் ஏர்வேஸ் இன்று செயல்பட முடியாமல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு என பல காரணிகள் ஜெட் ஏர்வேஸ்-சின் சரிவுக்குக் காரணமாக அமைந்தன. நிர்வாக சீர்கேடும், தவறான வழிநடத்தலும் மிகப்பெரிய காரணங்களாக கூறப்படுகின்றன.

பெரும் கடன் சுமையால் கடந்த சில வாரங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

எதிஹாட் ஏர்லைன்ஸ் உள்பட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கக் கூடிய நிறுவனங்கள், அதன் தலைவர் நரேஷ் கோயல் பதவி விலகினால் மட்டுமே, ஜெட் ஏர்வேஸ்-க்கு கடன் அளிக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்து வந்தன.

இதனைத்தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயலும், அவரது மனைவி அனிதா கோயலும் பதவி விலகியுள்ளதாக மும்பை பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிவிக்கையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.நேற்று நடைபெற்ற இயக்குநர்களின் குழு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ்-க்கு பத்திரங்கள் மூலமாக 1,500 கோடி ரூபாய் வழங்கவும், கடன் அளிப்பவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அன்றாட பணிகளை கவனிக்கவும், நிறுவனத்தின் வரவு செலவுகளை மேற்பார்வையிடவும் இடைக்காலக் குழுவை அமைக்கவும் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் நரேஷ் கோயலிடம் இருக்கும் 51 சதவிகித பங்குகளை 10 சதவிகிதமாகக் குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு இதேபோன்ற நெருக்கடியை சந்தித்த போது, அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் விமான நிறுவனம் 4,100 கோடி ரூபாய் மதிப்பிலான 24 சதவிகித பங்குளை வாங்கி ஜெட் ஏர்வேஸ்-சை சரிவிலிருந்து மீட்டது.

23,000 ஊழியர்கள் வேலை செய்யும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள், விமானிகளுக்கான ஊதியம், குத்தகைக்கு விடுபவர்களுக்கான பணம் என யாருக்கும் பணத்தை கொடுக்க முடியாமல் ஜெட் ஏர்வேஸ் தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... கரூர் தொகுதி ஓர் சிறப்பு பார்வை 
First published: March 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்